ஆசிய கோப்பையில் இந்தியா தொடரை விட்டு வெளியேறினாலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டைசியாக நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் விராட்கோலி அடித்த சதம் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அதிகரித்துள்ளது.
சுமார் 1000 நாட்களுக்கு பிறகு விராட்கோலி அடித்த சதம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள விராட்கோலி ரசிகர்கள அவரது சதத்தை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரது சதத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியுடனான இந்திய போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வந்திருந்தார். அவர் விராட்கோலி சதமடித்த பிறகு, தான் ஏற்கனவே கையில் கொண்டு வந்திருந்த பேட்டில் விராட்கோலியின் ஆட்டோகிராப்பை வாங்கினார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்த விராட்கோலி, தனது பேட்டில் ஆட்டோகிராப் போட்டதால் அந்த பாகிஸ்தான் ரசிகர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார்.
இதுதொடர்பாக, யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “என் கையில் உள்ள பேட் விராட்கோலி கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் கையெழுத்திட்டு தருமாறு கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்” என்றார்.
அந்த ரசிகரிடம் விராட்கோலி கையெழுத்திட்ட இந்த பேட்டை யாருக்காவது விற்பீர்களா? என்று அந்த யூ டியூபர் கேள்வி கேட்டபோது, “ஒருவர் இந்த பேட்டிற்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் திர்காம் ( அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1 லட்சம் வரை) கொடுப்பதாக கூறினார். ஆனால், ஒரு லட்சம் திர்ஹாம் ( 1 கோடி ரூபாய்) கொடுத்தாலும் விற்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்” என்று கூறினார்.
விராட்கோலி கையெழுத்திட்ட இந்த பேட்டை 1 கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்கமாட்டேன் என்று பாகிஸ்தான் ரசிகர் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலும் ஏராளமானோர் விராட்கோலிக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட்கோலியின் கையெழுத்திட்ட பேட்டை வைத்துள்ள பாகிஸ்தான் ரசிகர், பிரபல கிரிக்கெட் வீரர்களின் கையெழுத்திட்ட பேட்டை சேகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவரிடம் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் கையெழுத்திட்ட பேட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Virat Kohli Century: 'நாம் மீள்வோம்.. நல்ல நிலைக்கு வருவோம்' - பாசிட்டிவ் வைபாக ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கோலி!
மேலும் படிக்க : ICC Ranking : டி20 போட்டிகளில் தொடர்ந்து நம்பர் 1...! கம்பீரம் காட்டும் இந்தியா..!