சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைசிறந்த வீரராக வலம் வருபவர் விராட்கோலி. மூன்று வடிவ போட்டிகளிலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட்கோலி, சுமார் 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காமல் இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் சதமடித்து தனது மிகப்பெரிய கம்பேக்கை அளித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்களை விளாசிய விராட்கோலி, இந்தியாவின் பேட்டிங் முடிந்த பிறகு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இந்த சதத்தை எனது மனைவி மற்றும் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி தோற்றாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி சதம் விளாசியது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.


விராட்கோலியின் அபார சதத்திற்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடர் முழுவதும் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், “ஆசிய கோப்பை தொடர் முழுவதும் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அடுத்த முறை நாம் நல்ல நிலைக்கு வருவோம், வலிமையாக மீண்டு வருவோம்" என்று பதிவிட்டுள்ளார். 






ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் விராட்கோலி சதமடித்திருப்பது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள விராட்கோலியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22- 26-ந் தேதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதமடித்திருந்தார். அந்த டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் அடித்த விராட்கோலி அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எந்தவொரு சதத்தையும் அடிக்காமலே இருந்தார்.


இந்திய அணிக்காக டி20 போட்டியில் முதல் சதத்தை விளாசிய விராட்கோலி, ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் தனது 71வது சதத்தை விளாசியுள்ளார். விராட்கோலி மீண்டும் தனது சதங்கள் பயணத்தை தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ரன்மெஷின் என்று செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி இதுவரை இந்திய அணிக்காக 104 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 32 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 584 ரன்களை விளாசியுள்ளார். 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 12 ஆயிரத்து 344 ரன்களை விளாசியுள்ளார். 102 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 28 அரைசதங்கள் உள்பட 8 ஆயிரத்து 74 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.