ஐ.சி.சி. டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக ஆடும் வீரர்கள் வெகு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்.


அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்:


கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பல்வேறு சாதனைகளை பாபர் அசாம் முறியடித்துள்ளார். இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் புதிய வரலாறு படைத்துள்ளார்.


அதாவது, டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் மொத்தம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 13வது வீரர் ஆவார். இதற்கு முன்பு மிக குறைந்த இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தன்வசம் வைத்திருந்தார். அவர் 285 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருந்தார்.


கோலி சாதனை முறியடிப்பு:


ஆனால், பாபர் அசாம் 271 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி 299 இன்னிங்சில் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். டேவிட் வார்னர் 303 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.


பாகிஸ்தான் சூப்பர் லீக் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பெஷாவர் ஜல்மி – கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெஷாவர் ஜல்மி அணிக்காக கேப்டன் பாபர் அசாம் 51 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 72 ரன்கள் அடித்தார். புதிய வரலாறு படைத்துள்ள பாபர் அசாமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


அசத்தும் பாபர்:


சர்வதேச அளவில் 109 டி20 போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 33 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 698 ரன்களை எடுத்துள்ளார். மொத்தமாக 281 டி20 போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 84 அரைசதங்கள் உள்பட 10 ஆயிரத்து 66 ரன்களை எடுத்துள்ளார்.


29 வயதே ஆன பாபர் அசாம் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 26 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 898 ரன்களும், 117 ஒருநாள் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 32 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 729 ரன்களும் எடுத்துள்ளார்.


கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை தழுவியது. பாபர் அசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதையடுத்து, உலகக்கோப்பைத் தொடருக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார்.


மேலும் படிக்க: Most Ducks in IPL: ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை! அதிர்ச்சியில் ரசிகர்கள்


மேலும் படிக்க:"நான் கண் தெரியாதவன் அல்ல" - ஜானி பார்ஸ்டோ மீதான விமர்சனத்திற்கு மெக்கல்லம் பதிலடி