இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
கண் தெரியாதவன் அல்ல:
இந்திய அணியை காட்டிலும் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து அணி வலுவாக கொண்டிருந்தபோதிலும் எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பார்ஸ்டோ மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங் பற்றி கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியிருப்பதாவது,
“ நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல. எங்களுக்காக அவர் நிறைய செய்துள்ளார். ஜானி பார்ஸ்டோ யாருக்கு எதிராகவும், எந்த சூழலிலும் மிகச்சிறப்பாக ஆடுபவர் என்பது எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை தடுத்து அவருக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.
அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஜானி மீண்டும் நல்ல நிலைக்கு வருவார் என்பது உறுதி. ஜானி பார்ஸ்டோவுடன் சிறிது நேரம் செலவழித்து பேசினேன். அவரிடம் அவர் ஒரு தலைசிறந்த வீரர் என்பதை நினைவூட்டினேன்.” எனத் தெரிவித்தார்.
மோசமாக ஆடும் பார்ஸ்டோ:
ஜானி பார்ஸ்டோ இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும், 10 ரன்கள், 37 ரன்கள், 25 ரன்கள், 26 ரன்கள், 0 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அணியின் மிகவும் நம்பிக்கைக்குரிய வீரரான ஜானி பார்ஸ்டோ இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 சதம், 26 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 906 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் மட்டுமின்றி 3 வடிவிலான போட்டியிலும் இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரரான ஜானி பார்ஸ்டோ, 107 ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 17 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 868 ரன்களும், 70 டி20 போட்டிகளில் 1512 ரன்களும் எடுத்துள்ளார்.
அனுபவ வீரர்கள் சொதப்பல்:
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் ஜானி பார்ஸ்டோ கடந்த 10 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக இங்கிலாந்து அணிக்காக அவர் ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், போப் ஆகியோர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அனுபவ வீரர்களான ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இங்கிலாந்து பேட்டிங் ஆர்டருடன் ஒப்பிடும்போது அனுபவம் குறைந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!
மேலும் படிக்க: Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!