ஆசியக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது.


தொடக்கத்தில் தடுமாற்றம்:


கொழும்பு மைதானத்தில் மழையின் அச்சுறுத்தலுக்கு இடையே மிகவும் தாமதமாகவே இந்த ஆட்டம் தொடங்கியது. 45 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இமாம் உல் ஹக் ஆடாததால் ஷபிக் – பக்கர் ஜமான் ஆட்டத்தை தொடங்கினர்.


பக்கர் ஜமான் 4 ரன்களில் மதுஷன் பந்தில் போல்டாக அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் – அப்துல்லா ஷபிக் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வெல்லலகே சுழலில் பாபர் அசாம் ஸ்டம்பிங் ஆனார். அவர் 29 ரன்களில் அவுட்டாக, அடுத்து ரிஸ்வான் களமிறங்கினார்.


ரிஸ்வான் - இப்திகார் அபாரம்:


ரிஸ்வானுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் தடுமாறினார். பாபர் அசாமிற்கு பிறகு களமிறங்கிய முகமது ஹாரிஸ் 3 ரன்களிலும், முகமது நவாஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இடையில் மழையால் ஆட்டம் சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ரிஸ்வான் –  இப்திகார் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.


தீக்‌ஷனா, வெல்லலகே, டி சில்வா ஆகியோர் கட்டுப்பாடாக பந்துவீசியதால் பாகிஸ்தான் அணியினரால் ரன்களை குவிக்க முடியவில்லை. இந்த நிலையில், 150 ரன்களை கடந்த பிறகு பாகிஸ்தான் அணி ரன் சேகரிப்பில் துரிதமாக ஆடியது. மதுஷன் வீசிய ஓவரில் கிடைத்த நோ பாலாக இப்திகார் அகமது மாற்றிய பிறகு, ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஸ்கோரை குவிக்கத் தொடங்கினர்.


இந்த ஜோடியை பிரிக்க இலங்கை கேப்டன் சனகா மதுஷன், தீக்‌ஷனா, வெல்லலகே. பதிரானா,டி சில்வா ஆகியோரை பயன்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் அபாரமாக ஆடி தன்னுடைய 12வது அரைசதத்தை விளாசினார்.  ரிஸ்வான் – இப்திகார் ஜோடி அபாரமாக ஆடியதால் அவர்கள் பார்ட்னர்ஷிப் மட்டும் 100 ரன்களை கடந்தது.


கடைசியில் அதிரடி காட்டிய இப்திகார் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் ஆட்டமிழந்தார். கடைசியில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் முடிவில்7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 86 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 42 ஓவர்களில் 253 ரன் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையுடன் இலங்கை களமிறங்க உள்ளது. 


மேலும் படிக்க: Asia Cup 2023 Final: ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இருக்கு கனமழை.. கோப்பை யாருக்கு..? ரிசர்வ் டே இருக்கா..?


மேலும் படிக்க: SL vs PAK: இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று பலபரீட்சை