பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இன்று (டிசம்பர் 1) காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற சந்தேகம் இருந்த நிலையில், முதல் டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிபி தெரிவித்து தற்போது போட்டி நடைபெற்று வருகிறது.


இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் தொற்று


நேற்று வீரர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை அடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) மற்றும் இங்கிலாந்து வீரர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவர்களது அணியை களமிறக்கும் நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு தெரிவித்துள்ளது. மேலும், முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை, 1 டிசம்பர்) ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காலையில் அறிக்கை வெளியிட்டது.



ஒருநாள் தாமதம்


பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் புதன்கிழமை (நவம்பர் 30) ​​நடக்கவிருந்த முதல் டெஸ்டின் தொடக்கத்தை ஒரு நாள் பின்னுக்குத் தள்ளும் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனால் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு குணமடைய நேரம் கொடுக்கிறது என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்: மருமகளால் வந்த வில்லங்கம்..! ரோஜர் பின்னியின் பி.சி.சி.ஐ. தலைவர் பதவி பறிபோகிறதா..? நடந்தது என்ன..?


17 ஆண்டுக்கு பின் பயணம்


17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் வருகை தரும் அணியின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து முகாமில் ஏற்பட்ட ஒரு வைரஸ் தொற்று, அவர்களின் ஐந்து முதல் ஆறு வீரர்களுடன் சில துணைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது பயண சமையல்காரர் உள்ளிட்டோருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. வைரஸ் தொற்று ஏற்பட்டதால் ஜோ ரூட், சாக் க்ராலி, ஹாரி புரூக், ஒல்லி போப் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகிய ஐந்து இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே புதன்கிழமை பிண்டி மைதானத்தில் ஒரு விருப்ப பயிற்சியில் பங்கேற்றனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உட்பட மீதமுள்ளவர்கள்  ஹோட்டலில் தங்கினர்.






மற்ற போட்டிகளில் மாற்றம் உண்டா?


முல்தானில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் (டிசம்பர் 9-13) மற்றும் கராச்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் (டிசம்பர் 17-21) ஆகியவற்றின் அட்டவணையில் எந்த மாற்றமும் தற்போதைக்கு இல்லை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அட்டவணையின்படி விளையாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் லியாம் லிவிங்ஸ்டன் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறார். மேலும் க்ராலியுடன் பென் டக்கெட் பென்சில் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஸ்டோக்ஸ் வேகபந்துவீச்சு ஆப்ஷனாக உள்ளார்.