ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இலங்கை சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக ரத்தான நிலையில், மூன்றாவது போட்டியானது நேற்று நடைபெற்றது.
ஆப்கான் வீரர் அபார சதம்:
முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடிகாட்டும் குர்பாஸ், நேற்றைய போட்டியில் 5 ரன்களில் நடையைக்கட்டினார். அடுத்து வந்த மிடில் வரிசை வீரர்கள் தங்கள் விக்கெட்களை டக் டக்கென்று இழக்க, மறுமுனையில் இப்ராஹிம் சத்ரான் நங்கூரம் போல் நச்சென்று நின்றார். இவர் இலங்கை பந்துவீச்சாளர்கள் ஒற்றை ஆளாய் நின்று தண்ணிகாட்டி கொண்டு இருந்தார்.
3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி தடுமாறி கொண்டு இருந்தது. அப்போது, இப்ராஹிம் சத்ரானுடன் நஜிபுல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடுத்த விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. 76 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நஜிபுல்லா, ஹசரங்கா பந்தில் சனகாவிடம் கேட்சாக, ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 138 பந்துகளில் 162 ரன்கள் குவித்து அவுட்டானார். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி எடுத்திருந்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 3 விக்கெட்களும், ஹசரங்கா 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.
314 ரன்கள் இலக்கு:
314 எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, சிறப்பான தொடக்கம் தந்தது. தொடக்க வீரர்களான பதும் நிஷங்கா 35 ரன்களும், குஷல் மெண்டிஸ் 67 ரன்களு அடித்துஓரளவுக்குச் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்து களமிறங்கிய சண்டிமாலும் தன் பங்கிற்கு 33 ரன்களுடன் நடையைக்கட்ட தொடர்ந்து கேப்டன் ஷனகாவும் 43 ரன்களுடன் வெளியேறினார்.
கிட்டதட்ட இலங்கை அணியின் கதை முடிந்துவிட்டது என நினைத்த நிலையில், அசலங்கா - வெல்லாலகே ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை ஆப்கானிஸ்தான் அணியால் கடைசிவரை உடைக்க முடியவில்லை.
இலங்கை வெற்றி:
கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் இருநாட்டு ரசிகர்களிடம் பதட்டம் தொற்றிக்கொண்டது. அப்போது குல்பதீன் வீசிய ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் பறக்க, அதே ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து பரூக்கி வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் வெல்லாலகே சிக்ஸர் அடிக்க, அடுத்த 4ஆவது பந்தில் அசலங்கா சிக்ஸர் அடித்து வெற்றியை இலங்கைக்கு பரிசளித்தார். அசலங்கா 83 ரன்களுடனும், வெல்லாலகே 31 ரன்களுடனும் கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வென்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரும் சமன் ஆனது.