இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக பதவியேற்று இன்னும் ஒருமாதம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், அவர் மீது சஞ்சீவ் குப்தா என்ற நபர் புகார் அளித்துள்ளார்.
ரோஜர் பின்னி மருமகள்:
அந்த புகாரில், ’ரோஜர் பின்னியின் மருமகளான மாயந்தி லாங்கர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.
அதன்படி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் மாயந்தி லாங்கர், மீண்டும் தொகுப்பாளராக களமிறக்கப்பட்டதற்கு ரோஜர் பின்னிதான் காரணம். அவர் தனது பதவியை பயன்படுத்தி தனது மருமகளுக்கு பணியமர்த்தியுள்ளார்” என்று அந்த குற்றசாட்டில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, புகாரின் பேரில் பிசிசிஐயின் நெறிமுறை அதிகாரி வினீத் சரண் ரோஜர் பின்னிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், பிசிசிஐயில் விதியை மீறியதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நீங்கள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை வருகின்ற டிசம்பர் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
யார் இந்த ரோஜர் பின்னி..?
1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி, அக்டோபர் மாதம் பிசிசிஐயின் 36வது தலைவராக பதவியேற்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டார்.
67 வயதான ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னிக்கு அறிமுகம் தேவையில்லை. 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஜர் பின்னி இடம் பெற்றிருந்தார். அந்த உலகக் கோப்பையில் 18 விக்கெட்டுகளுடன் பின்னி அதிக விக்கெட் வீழ்த்தி இந்திய வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியாவுக்காக விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி ஆவார். ரோஜர் பின்னி 1979-87 காலகட்டத்தில் இந்தியாவுக்காக 27 டெஸ்ட் மற்றும் 72 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றார். 1979 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூர் டெஸ்ட் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.