உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 33வது போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் 4 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், விராட்கோலி – சுப்மன்கில் ஜோடி ஆடி வருகின்றனர்.
சச்சின் சாதனை முறியடிப்பு:
இந்த போட்டியில் ரன்களை சேர்த்து வரும் விராட் கோலி நடப்பாண்டில் மட்டும் 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பாண்டில் 1000 ரன்களை எட்டியுள்ள 4வது வீரர் ஆவார். மேலும், ஒரே வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களுக்கும் மேலாக விராட் கோலி குவிப்பது இது 8வது முறையாகும். இதன்மூலம் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளார்.
ஒரே ஆண்டில் 8வது முறை:
அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிக முறை எட்டிய வீரர் என்ற பெருமையை இதுவரை தன் வசம் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார். அவரது சாதனையை ஏற்கனவே சமன் செய்திருந்த விராட்கோலி தற்போது அவரது சாதனையை முறியடித்துள்ளார். விராட்கோலி 2011ம் ஆண்டு, 2012ம் ஆண்டு, 2013ம் ஆண்டு, 2014ம் ஆண்டு, 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு என ஏற்கனவே 7 முறை ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
தற்போது நடப்பாண்டான 2023ம் ஆண்டிலும் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் ஒரே ஆண்டில் 1000 ரன்களை எட்டு முறை கடந்த ஒரே வீரர் என்ற புதிய வரலாற்றையும் விராட் கோலி படைத்துள்ளார்.
மற்ற வீரர்கள் யார்? யார்?
கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1994ம் ஆண்டு, 1996ம் ஆண்டு, 1997ம் ஆண்டு, 1998ம் ஆண்டு, 2000ம் ஆண்டு, 2003ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் சவ்ரவ் கங்குலி உள்ளார். அவர் 6 முறை விளாசியுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககரா 6 முறையும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 6 முறையும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது யூசூப் 4 முறையும், இந்திய கேப்டன் ரோகித்சர்மா 4 முறையும், இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 4 முறையும், இலங்கை முன்னாள் கேப்டன்களான ஜெயவர்தனே, தில்ஷன் தலா 4 முறையும், இந்திய முன்னாள் கேப்டன் தோனி, டிவிலியர்ஸ் மற்றும் டிராவிட் தலா 3 முறையும் ஒரே ஆண்டில் 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளனர்.
நடப்பாண்டில் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை இந்திய வீரர் சுப்மன்கில், இலங்கையின் பதும் நிசங்கா, இந்திய கேப்டன் ரோகித்சர்மா அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs SL LIVE Score: டாஸ் வென்ற இலங்கை.. ரோகித் அவுட், கோலி - கில் பொறுப்பான ஆட்டம்
மேலும் படிக்க: Mitchell Marsh: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மிட்செல் மார்ஷ்.. உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகல்..!