உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


15வது உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை , ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளது. மேலும் சென்னை, டெல்லி, புனே, மும்பை, ஹைதராபாத், அஹமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஹிமாச்சல பிரதேசம், லக்னோ ஆகிய 10 இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 


நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 32 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது. ஆனால் எந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இரண்டு அணிகள் கிட்டதட்ட நெருங்கி விட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு கடும் போட்டியானது நிலவுகிறது.இதில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்ய அந்த அணி பலத்த திட்டத்தோடு இருக்கும் நிலையில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 


இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நேற்றிரவு ஆஸ்திரேலியா திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர் மீண்டும் எப்போது அணியில் இணைவார் என தெரிவிக்கப்படவில்லை.