ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.


அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தற்போது அந்த அணிதான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.


 


இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 8) நடைபெற்ற 5 வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. முன்னதாக அந்த போட்டியில், இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரும், தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவருமான சுப்மன் கில் களம் இறங்கவில்லை.


டெங்கு காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் அந்த போட்டியில் விளையாட முடியவில்லை. மேலும், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறங்கினார்.






 


அடுத்த போட்டியில் கில் விளையாடுவாரா?


இச்சூழலில், நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.


இதனிடையே, வரும் அக்டோபர் 11 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியை விளையாட உள்ளது.


அதன்படி, வங்கதேச அணிக்கு எதிராக தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் தற்போது ஏழாவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.


ஆகையால் இந்தப்போட்டியிலாவது அதிரடி வீரர் சுப்மன் கில் களமிறங்குவார என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் டெங்கு காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்குவார்?


அதேநேரம், அக்டோபர் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆயினும் இது தொடர்பாக ஐசிசி-யோ அல்லது இந்திய அணியோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்கவில்லை.


இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதால் சுப்மன் கில் விரைவில் குணமடைந்து களம் காண வேண்டும் என்று ரசிகர்கள் இப்போதே பிரார்த்தனை செய்ய தொடங்கி விட்டனர்.


முன்னதாக இந்த ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் சுப்மன் கில் 5 அரைசதம், 5 சதம் உட்பட மொத்தம் 1230 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், அதிகபட்சமாக 208 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ODI WC Pak Vs Ned: உலகக் கோப்பையில் இன்றைய போட்டி - பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சமாளிக்குமா நெதர்லாந்து? வெற்றி யாருக்கு?


 


மேலும் படிக்க: CWC Best Bowlers : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க போகும் பவுலர்கள் யார்?