2023 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் இந்த போட்டியானது ஹைதராபாத் ராஜுவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
அதே சமயம் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து அணியும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒருநாள் போட்டியில் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், நியூசிலாந்து அணியே அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து-நெதர்லாந்து உலகக் கோப்பையின் தற்போதைய ஃபார்ம் மற்றும் இரு அணிகளின் தலைசிறந்த சாதனைகளைப் பார்த்தோமேயானால், நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி நெதர்லாந்துக்கு எதிரான ஐந்தாவது வெற்றியை எதிர்பார்க்கிறது. இருப்பினும், கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி விளையாடிய விதத்தை பார்த்தால் இன்றைய போட்டி சுவாரஸ்யத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பையில் நேருக்கு நேர்:
நெதர்லாந்தும் நியூசிலாந்தும் உலகக் கோப்பையில் ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளன. இந்த போட்டியானது கடந்த 1996ம் ஆண்டில் நடந்தது. இது நெதர்லாந்தின் முதல் உலகக் கோப்பை போட்டியாக அமைந்தது. வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 307/8 என்ற அபாரமான ரன்களைக் குவித்தது. அதன் பிறகு நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 188/7 எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிட்ச் எப்படி..?
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு.. எனவே, இன்றைய போட்டியில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இரு அணி விவரம்:
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்
நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்ஃபிக் , ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்
முந்தைய போட்டியில் நெதர்லாந்து அணி:
பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் இடையிலான 2023 உலகக் கோப்பை ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய வந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பதிலுக்கு பேட்டிங் ஆட வந்த நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 205 ரன்களில் சுருண்டது.