கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய போட்டிகளில் ஒன்று 50 ஓவர் உலகக்கோப்பை திருவிழா. இந்த நிலையில், இந்தியாவில் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உலகக்கோப்பை திருவிழா நாளை தொடங்குகிறது. மொத்தம் 10 கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.


உலகக்கோப்பை திருவிழா தொடக்கம்:


இந்த சூழலில், குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை உலகக்கோப்பையின் முதல் போட்டி தொடங்குகிறது. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த முறை இறுதிப்போட்டியில் பட்டத்தை கோட்டைவிட்ட நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதுகின்றன.


நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க கனே வில்லியம்சன் தலைமையில் களமிறங்க உள்ளது. அகமதாபாத் மைதானம் 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்கும் தன்மை கொண்டது என்பதாலும், தொடக்கப்போட்டி என்பதால் வெளிநாட்டு ரசிகர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


பலத்த பாதுகாப்பு:


தொடக்கப் போட்டி என்பதால் ஐ.சி.சி.யின் உயர் அதிகாரிகளும், பி.சி.சி.ஐ.யின் முக்கிய அதிகாரிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்க இருப்பதால் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்பதால், மைதானம் மற்றும் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும், உலகக்கோப்பையை கண்டுகளிக்க வெளிநாட்டு அணிகளில் ரசிகர்களும் இந்தியாவில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த போட்டி நடைபெறும் மைதானங்களின் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அகமதாபாத் மைதானத்தை சுற்றியுள்ள ஹோட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகிறது.


அணி விவரம்:


போட்டி தொடங்குவதற்கு முன்பு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் வரும் 8-ந் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜானி பார்ஸ்டோ, டேவிட் மலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ரஷீத், மார்க் வுட், ஹாரி ஃப்ரூக், அட்கின்சன், டோப்ளே, டேவிட் வில்லி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.


விறுவிறுப்பு:


நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் தலைமையில் டாம் லாதம், கான்வே, வில் யங், டேரில் மிட்செல், மார்க் சாப்மன், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சோதி, மாட் ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட், பெர்குசன், சவுதி, சான்ட்னர் மற்றும் நீஷம் இடம்பிடித்து உள்ளனர்.  


நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றியுடன் இந்த தொடர முனைக்கும் என்பதாலும், கடந்த முறை தோற்றதற்கு பழிதீர்ப்பதற்காக நியூசிலாந்து அணியும் வெறியுடன் களமிறங்கும் என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே சொல்லலாம்.


மேலும் படிக்க: ICC Worldcup Prize Money: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - கோடிகளை வாரிக் கொடுக்கும் ஐசிசி, பரிசு விவரங்கள் இதோ..!


மேலும் படிக்க: ODI WC 2023 South Africa Team: ”லக்” இல்லாத தென்னாப்ரிக்கா - உலகக்கோப்பை அணியின் சாதக, பாதகங்கள் என்ன?