ODI WC 2023 South Africa Team: உலகக் கோப்பை தொடரில் தென்னாப்ரிக்கா அணியின் விவரங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே, பவுமா தலைமையிலான 15 பேர் கொண்ட தென்னாப்ரிக்கா அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கான எல்லாம் இருந்தும் ராசி மட்டும் இல்லாத ஐசிசி தொடர்களின் சோக்கர்ஸ் என அழைக்கப்படும் அந்த அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தென்னாப்ரிக்கா அணி விவரம்:
டெம்பா பவுமா தலைமையிலான அந்த அணியில் ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தகிப்ரா ரவுக்வாயோ, ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்ரிக்கா அணியின் பலம்:
வலுவான பேட்டிங் லைன்-அப் தென்னாப்ரிக்கா அணியின் முக்கிய பலமாக கருதப்படுகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் உள்ள எய்டன் மார்க்ரம்,. ஹென்றிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்து வருகின்றனர். இதனால், தொடக்க வீரர்கள் ஒரு சில போட்டிகளில் தடுமாறினாலும், தென்னாப்ரிக்காவின் பேட்டிங் யூனிட் பலமாகவே உள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் நிலையில், சுழற்பந்துவீச்சை சமாளிப்பதில் தென்னாப்ரிக்க வீரர்கள் சற்றும் மேம்பட்டவர்களாக இருப்பது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவர்களது மற்றொரு முக்கிய பலமாக கருதப்படுவது வேகப்பந்து வீச்சு தான். வேகப்பந்துவீச்சில் பல ஜாம்பவான்களை கொண்டிருந்த அந்த அணி, தற்போதும் ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி மற்றும் மார்கோ ஜான்சென் போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ளது. தென்னாப்ரிக்க வீரர்களில் பெரும்பாலானோர் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது, அணியில் கூடுதல் பலமாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகராஜ் மற்றும் நம்பிக்கைக்குரிய இளம் வீரர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் போட்டியின் போக்கை மாற்றக்கூடியவர்களாக உள்ளனர். கிளாசென் மற்றும் மார்கோ ஜான்சென் ஆல்-ரவுண்டர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.
தென்னாப்ரிக்கா அணியின் பலவீனங்கள்:
தென்னாப்ரிக்கா அணி வேகப்பந்து வீச்சில் பலமான யூனிட்டை கொண்டு இருந்தாலும், டெத் ஓவர்களை வீசுவதற்கான கைதேர்ந்த நபர்கள் இல்லை என்பது பெரும் பின்னடைவாக உள்ளது. குறிப்பாக நோர்ட்ஜே காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது அணியின் டெத் ஓவர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதைதாண்டி மிகப்பெரிய பலவீனமாக இருப்பது, உலகக்கோப்பை வரலாற்றில் அவர்களது சொந்த வரலாறு தான். நல்ல ஃபார்மில் இருந்தாலும், மிக முக்கியமான போட்டியில் சொதப்புவது அவர்களது வாடிக்கையாக உள்ளது.
தென்னாப்ரிக்கா அணியின் போட்டி விவரங்கள்:
தேதி | போட்டி விவரங்கள் | மைதானம் |
அக்டோபர் 7 | தென்னாப்ரிக்கா - இலங்கை | டெல்லி |
அக்டோபர் 12 | தென்னாப்ரிக்கா - ஆஸ்திரேலியா | லக்னோ |
அக்டோபர் 17 | தென்னாப்ரிக்கா - நெதர்லாந்து | தர்மசாலா |
அக்டோபர் 21 | தென்னாப்ரிக்கா - இங்கிலாந்து | மும்பை |
அக்டோபர் 24 | தென்னாப்ரிக்கா - வங்கதேசம் | மும்பை |
அக்டோபர் 27 | தென்னாப்ரிக்கா - பாகிஸ்தான் | சென்னை |
நவம்பர் 1 | தென்னாப்ரிக்கா - நியூசிலாந்து | புனே |
நவம்பர் 5 | தென்னாப்ரிக்கா - இந்தியா | கொல்கத்தா |
நவம்பர் 10 | தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் | அகமதாபாத் |
உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்கா அணி:
சர்வதேச அரங்கில் வலுவான அணியாக இருந்தாலும், ஐசிசியின் உலகக்கோப்பை தொடர்களில் சொதப்புவது என்பது தென்னாப்ரிக்காவின் வாடிக்கையாக உள்ளது. அதிகபட்சமாக இதுவரை 4 முறை அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட அந்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.