ICC Worldcup Prize Money: உலகக்கோப்பை 2023 தொடரில் ஒவ்வொரு அணிக்கும் கொடுப்பதற்காக, ஐசிசி ஒதுக்கியுள்ள பரிசுத்தொகையின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
உலகக்கோப்பை தொடர்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் சுற்று சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட, இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் நடைபெற்றன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உடன் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. ஆனால் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா:
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வரும் 19ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதன் மூலம், 2003ம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு, ஆஸ்திரேலியாவை இந்தியா பழிவாங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியும் இப்போட்டியை காண மைதானத்திற்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி வழங்கும் பரிசுத்தொகை:
இதனிடையே, ரசிகர்களுக்கு மிகப்பெரும் பொழுதுபோக்கை வழங்க உள்ள இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்க, ஐசிசி மிகப்பெரும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83 கோடியே 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பரிசு விவரங்கள்:
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்
- இறுதிப்போட்டியில் தோல்வியுறும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்
- அரையிறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6.65 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்
- நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத 6 அணிகளுக்கு தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்
- லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 40 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும்