உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த 24வது போட்டியில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், வார்னர் அபாரமாக ஆடி சதம் விளாசினார்.


400 ரன்கள் டார்கெட்:


அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 71 ரன்களிலும், லபுஷேனே 62 ரன்களிலும் அவுட்டான பிறகு 40வது ஓவரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி 40 ரன்களில் அதிவேக சதம் விளாசினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தனர்.


இதையடுத்து, 400 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கம் முதல் அதிரடியாக ஆட ஆரம்பித்தது. ஆனால், தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டவ்ட் 6 ரன்களில் போல்டானார். மறுமுனையில் பவுண்டரிகளாக விளாசிய விக்ரம்ஜித்சிங் மேக்ஸ்வெல்லால் ரன் அவுட்டானார்.


சீட்டுக்கட்டு போல சரிந்த நெதர்லாந்து:


இதையடுத்து, நெதர்லாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. ஆக்கர்மேன் 10 ரன்களிலும், லீட் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் எட்வர்ட்ஸ் நிதானமாக ஆட்டத்தை ஆடினார். சைப்ரண்ட் 11 ரன்களிலும், தேஜா 14 ரன்களிலும் அவுட்டானார். டெயிலண்டர்களான வான் பீக், மெர்வி டக் அவுட்டாக, ஆர்யன் தத் 1 ரன்னிலும், மீகரன் டக் அவுட்டும் ஆக 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இதனால், ஆஸ்திரேலிய அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இமாலய வெற்றி மூலமாக ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


இமாலய வெற்றி:


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலமாக ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 2 தோல்வி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தன்னுடைய அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி பெற்ற இந்த வெற்றியானது ஒருநாள் போட்டியில் ஒரு அணி பெற்ற மிகப்பெரிய 2வது வெற்றியாகும்.


மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். சர்வதேச அளவில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்தியா தன்வசம் வைத்துள்ளது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வெற்றியே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.


மேலும் படிக்க: Watch Video: புஷ்பா பட பாணியில் சதத்தை கொண்டாடிய டேவிட் வார்னர் - ஆர்ப்பரித்த ரசிகர்கள்!


மேலும் படிக்க: ODI WC 2023 Maxwell: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேக சதம்! 40 பந்துகளில் வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!