உலகக் கோப்பை கிரிக்கெட்  2023 இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரில் டெல்லியில் இன்று நடக்கும் 24வது போட்டியில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.


சதம் விளாசிய வார்னர்:


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்காக பேட்டிங்கைத் தொடங்கிய மிட்செல் மார்ஷ் 9 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் – ஸ்டீவ் ஸ்மித் நிதானமாகவும் பொறுப்புடன் ஆடினர்.


இருவரும் இணைந்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் கடந்த பின் வார்னர் ரன்குவிப்பை துரிதப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ஸ்மித் 71 ரன்களில் அவுட்டானார். அவர் 68 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து வந்த லபுஷேனேவும் சிறப்பாக ஆடினார். இதனால், ஆஸ்திரேலிய அணி சிரமமின்றி 200 ரன்களை கடந்தது.






புஷ்பா பாணியில் கொண்டாட்டம்:


லபுஷேனே களமிறங்கியது முதல் அதிரடியாகவே ஆடினார். பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வார்னர் சதம் விளசினார். இங்கிலிஷ் 14 ரன்களில் அவுட்டாக சிறப்பாக ஆடி சதம் விளாசிய 104 ரன்களில் அவுட்டானார். அவர் 93 பந்துகளில் 3 சிக்ஸர் 11 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்தார். உலகக்கோப்பையில் வார்னர் விளாசும் 6வது சதம் இதுவாகும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய 2வது வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். சதம் விளாசியவுடன் தன்னுடைய வழக்கமான பாணியில் துள்ளிக்குதித்த டேவிட் வார்னர் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புஷ்பா பட பாணியில் தனது சதத்தை கொண்டாடினர்.


ரசிகர்களை கவரும் வார்னர்:


ஐ.பி.எல். தொடரில் ஹைதரபாத் அணிக்காக கேப்டனாக ஆடி சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுத்த வார்னர் தெலுங்கு படங்களில் வரும் பாடல்களுக்கும், வசனங்களுக்கும் ரீல்ஸ் செய்து இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் உள்ளார். குறிப்பாக, இந்தியா முழுவதும் வசூலில் வெற்றிக்கொடி நாட்டிய புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜூனின் புஷ்பா கதாபாத்திர உடல்மொழிகளையும் அவ்வப்போது ரீல்ஸ் செய்தும், மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின்போது ரீல்ஸ் செய்தும் அசத்தி வருகிறார்.


கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல்லின் மிரட்டல் சதத்தால் ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.