இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அமோல் மஜும்தாரை நியமனம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தது. ஆலோசனைக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட குழு ஒருமனதாக அமோல் மஜும்தாரை இந்தப் பதவியை ஏற்க பரிந்துரைத்தது.
யார் இந்த அமோல் மஜும்தார்..?
அமோல் மஜும்தார் தனது 21 ஆண்டுகால வாழ்க்கையில் 171 முதல் தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 60 அரை சதங்கள் உதவியுடன் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், அவர் 113 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 26 அரை சதங்களுடன் 3286 ரன்களும், 14 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் உட்பட174 ரன்கள் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ பிரிவில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
மும்பை அணியில் விளையாடி பல ரஞ்சி டிராபி பட்டங்களை வென்றுள்ளார். பின்னர், அசாம் மற்றும் ஆந்திரப் பிரதேச அணிகளிலும் விளையாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார், மேலும் இந்திய சுற்றுப்பயணத்தின் போது தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணிக்கு இடைக்காலப் பொறுப்பையும் ஏற்றார். மூத்த பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார்.
தொடர்ந்து, இந்தியா அண்டர்-19 மற்றும் அண்டர்-23 கிரிக்கெட் அணிகளுக்கும் இவர் பயிற்சி வழங்கியுள்ளார். மேலும் அவர் நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
மஜும்தாரின் வழிகாட்டுதலால் பயனடைவார்கள்: பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அமோல் மஜும்தார் நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அவரது பதவிக்காலத்தில், அணி தொடர்ந்து வளர்ச்சியடைந்து பல்வேறு வடிவங்களில் சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன். இருதரப்பு மற்றும் பல தேசிய நிகழ்வுகளில் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மேலும் மஜும்தாரின் வழிகாட்டுதலின் கீழ் எங்கள் வீரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.
மஜும்தாரைப் பாராட்டிய ஜெய் ஷா
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், எங்கள் தேசிய அணிக்கான புதிய தலைமைப் பயிற்சியாளரை அடையாளம் காண முழுமையான மதிப்பீடு மற்றும் தேர்வு செயல்முறையை நடத்தியதற்காக நான் CAC க்கு நன்றி கூறுகிறேன். மேலும் அமோல் மஜும்தாரின் நியமனத்திற்கு நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன். அவருக்கு அறிவு மற்றும் நிபுணத்துவம் மற்றும் நவீன விளையாட்டின் ஆழமான புரிதல் உள்ளது. பெண்கள் கிரிக்கெட்டில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. மேலும் அணிக்கு களத்திலும் வெளியேயும் சிறந்து விளங்க தேவையான சூழலை தொடர்ந்து வழங்கும். வாரியம் மஜும்தாருக்கு முழுமையாக ஆதரவளித்து, அவருடன் நெருக்கமாகப் பணியாற்றி, எங்கள் வீரர்களின் முழுத் திறனையும் அடைய உதவும்.
மஜும்தார் என்ன சொன்னார்?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் கூறுகையில், “இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது எனக்கு மிகவும் பெருமையாகவும், பாக்கியமாகவும் இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து, இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக என்னை நியமித்து நம்பிக்கை வைத்ததற்காக (CAC - Cricket Advisory Committee) மற்றும் BCCI க்கு நன்றி. இது ஒரு பெரிய பொறுப்பாகும், மேலும் திறமையான வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றவும், சிறந்து விளங்குவதற்கும் வழிகாட்டுதலை வழங்கவும் நான் எதிர்நோக்குகிறேன். இந்த காலகட்டத்தில் இரண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.