உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 24வது போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் சதம் விளாசிய நிலையில், கடைசி கட்டத்தில் களமிறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை வரலாற்றிலே இதுதான் அதிவேக சதம் ஆகும். இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மார்க்ரம் படைத்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேக்ஸ்வெல் சரவெடி:
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் அவுட்டாக அதிர்ச்சி தந்தாலும், வார்னர் 104 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், லபுஷேன் 62 ரன்களும் எடுத்து நல்ல வலுவான நிலையிலே ஆஸ்திரேலிய அணியை வைத்திருந்தனர்.
ஆட்டத்தின் 40வது ஓவரில் அணியின் ஸ்கோர் 266 ரன்களை ஆஸ்திரேலிய எட்டியிருந்தபோதுதான் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்யவே வந்தார். மேக்ஸ்வெல் அதிரடி வீரர் என்பதால் நிச்சயம் வான வேடிக்கை நடத்துவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர் இறங்கிய நேரத்தில் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை இழந்ததால் அவர்களை கட்டுப்படுத்தலாம் என்றே நெதர்லாந்து அணி நினைத்திருக்கும்.
40 பந்துகளில் சதம்:
ஆனால், 40வது ஓவரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புது இன்னிங்சை மேக்ஸ்வெல் ஆடினார். அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். குறிப்பாக, ஏபி டிவிலியர்ஸ் போன்று 360 டிகிரியில் பந்துகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். 46வது ஓவரில் அரைசதம் விளாசிய அவர் 48வது ஓவரில் சதம் விளாசினார். வெறும் 40 பந்துகளிலே மேக்ஸ்வெல் சதம் விளாசி அணியின் ஸ்கோரை வலுவாக்கினார்.
வெறும் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசி சதம் அடித்த மேக்ஸ்வெல் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றிலே மிகக்குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, இதே உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக 49 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து இந்த மிகப்பெரிய சாதனையை மார்க்ரம் தன்வசமாக்கினார். அவரது சாதனையை இதே உலகக்கோப்பைத் தொடரில் மேக்ஸ்வெல் தன் வசமாக்கியுள்ளார். அவர் கடைசியில் 106 ரன்களுக்கு அவுட்டானார்.
புதிய வரலாறு:
2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் கெவின் ஓ ப்ரையன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்திருந்தார். 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் மேக்ஸ்வெல் இலங்கை அணிக்கு எதிராக 51 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலே டிவிலியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் விளாசியதே இதுவரை குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட சதமாகும்.