ODI World Cup: உலகில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அதிகமாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாடாத அல்லது கிரிக்கெட் என்ற விளையாட்டே பெரிதும் பிரபலமாகாத நாடுகளும் இன்று வரை இருந்துகொண்டுதான் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி மீதான ஆர்வம் தற்போது பல நாடுகளுக்கு வந்திருந்தாலும் அதன் மூலக்காரணமாக இருப்பது, கிரிக்கெட் என்ற விளையாட்டை மைய்யப்படுத்தி நடக்கும் வியாபாரம்தான். உலகக்கோப்பை தொடங்கப்பட்ட காலத்தில் இதுபோன்று வியாபரத்தை மைய்யப்படுத்தி தொடர்கள் நடத்தப்படவில்லை என்றாலும், உலகநாடுகள் தனியார்மையத்தை நோக்கி நகர்ந்த பின்னர் கிரிக்கெட் மிகவும் முக்கியமான வியாபார விளையாட்டாகவே மறிவிட்டது. கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்கள் நாட்டில் லீக் (கிளப்) போட்டியை நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
என்னதான் கிளப் போட்டிகளை பல நாடுகள் நடத்தினாலும் உலகக்கோப்பைக்கு உள்ள மவுசு எப்போதும் தனிதான். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் ஒருநாள் உலகக்கோப்பை குறித்தும், அதன் வெற்றியாளர்கள் மற்றும் அதில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம். 1909 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர்களாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா என மூன்று நாடுகள் மட்டுமே இருந்தது. ஆனால் தொடக்கத்தில் இதன் பெயர் இப்படி இருக்கவில்லை. தொடக்கத்தில் இதன் பெயர் இம்பீரியல் கிரிக்கெட் கவுன்சில் (Imperial Cricket Conference) என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் 1965ஆம் ஆண்டு இதன் பெயர் சர்வதேச கிரிக்கெட் கன்ஃப்ரன்ஸ் ( International Cricket Conference ) என பெயர் மாற்றப்பட்டது. அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்ட காலத்தில்தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதுவே இப்போதுவரை உள்ளது.
முதலாவது உலகக்கோப்பை - 1975
ஐசிசியால் நடத்தப்பட்ட முதல் உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்று முதல் உலகக்கோப்பையை வென்றது. இதில் இந்திய அணியும் கலந்து கொண்டு, லீக் போட்டியில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது.
மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம்
1979ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கிரிக்கெட்டினை தேசிய விளையாட்டாக கொண்டுள்ள நாடான இங்கிலாந்தும், மிகவும் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதிக்கொண்டது. இம்முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு வெற்றி பயணத்திற்கு முற்றிப்புள்ளி வைத்த இந்தியா
1983ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலகக்கோப்பையினையும் வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வெல்லும் என எதிர்பார்த்து காத்திருந்தது கிரிக்கெட் உலகம். ஆனால் இந்த தொடரில் இந்திய் அணி சிறப்பான ஆட்டத்தினை ஆடி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மட்டும் இல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹாட்ரிக் கோப்பை கனவிற்கு முற்றுப் புள்ளி வைத்தது மட்டும் இல்லாமல், உலகக்கோப்பையை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெற்றது.
இங்கிலாந்துக்கு வெளியே முதல் உலகக்கோப்பை
1987ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தின. ஆனால் இந்த இரு நாடுகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. இம்முறை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பையில் இருந்துதான் போட்டி 50ன் ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதற்கு முன்னர் 60 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றிருந்தது.
பாகிஸ்தானின் முதல் உலகக்கோப்பை
1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. இந்த உலகக்கோப்பையின் இறுதியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்துதான் அனைத்து அணிகளும் வண்ண நிற ஜெர்சியை அணியத் தொடங்கின.
இலங்கை அணிக்கு முதல் உலகக்கோப்பை
1996ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பாகிஸ்தான் மற்றும் இந்தியா இணைந்து நடத்தியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவின் ராஜ்யம்
1999ஆம் ஆண்டு, 2003ஆம் ஆண்டு மற்றும் 2007ஆம் ஆண்டு என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்று அசத்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 முறை கோப்பையை வென்ற அணி தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது. இந்த மூன்று தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
தோனி எண்ட்ரி
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய அணிகள் இணைந்து நடத்தின. இதில் இந்திய அணி தோனி தலைமையில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை கால் இறுதி ஆட்டத்தில் வெளியேற்றியது. இதன் மூலம் ஹாட்ரிக் கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற ஆவலாக இருந்த ரிக்கி பாண்டிங் கனவில் மண்ணை அள்ளிப்போட்டது இந்திய அணி. இறுதிப் போட்டியில் ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வென்றது. இந்த உலகக்கோப்பையில்தான் நடுவரின் முடிவை எதிர்த்து இரு அணிகளும் மறுபரிசீலனை செய்யும் முறை அதாவது டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் சூப்பர் ஓவர் முறையும் இந்த உலகக்கோப்பையில்தான் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும் இந்த உலகக்கோப்பையில்தான் நவீன ஸ்டெம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மீண்டும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நடத்தின. இறுதிப் போட்டியிலும் இந்த இரு அணிகள்தான் மோதிக் கொண்டன. இதில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 5வது கோப்பையை வென்றது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி தொடர் முழுவதும் நியூசிலாந்திலேயே விளையாடியது. இறுதிப் போட்டியை விளையாடவே நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு வந்தது. நியூசிலாந்து மைதானங்கள் ஒப்பீட்டு அளவில் ஆஸ்திரேலிய மைதானங்களை விடவும் சிறியவை. நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
ஒருவழியாக கோப்பையை ஏந்திய இங்கிலாந்து - நியூசிலாந்தின் சோகக்கதை
கடந்த அதாவது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை மீண்டும் இங்கிலாந்து அணியே நடத்தியது. இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இரு அணிகளும் உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், புதிய அணி உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என கிரிக்கெட் உலகம் பரபரப்பாகிக்கொண்டு இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்தது. இதனால் போட்டியின் முடிவை எட்ட சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 15 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்ததால், போட்டி மீண்டும் டிரா அடைந்தது. இதனால் போட்டியின் வெற்றியாளரை போட்டியின் 50 ஓவர்கள் மற்றும் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அதாவது சிக்ஸர் மற்றும் ஃபோர்கள் விளாசிய இங்கிலாந்து அணி (26-17) உலகக்கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. 2015 மற்றும் 2019ஆம் ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியததால் ஒட்டுமொத்த நியூசிலாந்து அணியும் நொருங்கிப் போனது. இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இயான் மார்கன் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முறை இந்தியா வெல்லுமா?
2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி தனது மூன்றாவது கோப்பையை வெல்வதற்கான சூழல் உள்ளது என கிரிக்கெட் ஜாம்வான்கள் கூறிவருகின்றனர். இதனை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாத்தியப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.