ODI World Cup 2023: கிரிக்கெட் 1975ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேது 13வது தொடர் தொடங்கவுள்ளது. உலகக்கோப்பையில் களமிறங்கும் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாக இருந்து இன்னும் கோப்பையை கைப்பற்றாத அணி என்றால் அது தென் ஆப்ரிக்காவும் நியூசிலாந்தும்தான்.  இதில் நியூசிலாந்து அணிகூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. மேலும் கடந்த இரண்டு உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிவரை முன்னேறியுள்ளது. ஆனால் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி அரையிறுதியில் சொதப்பும் அல்லது வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அது ஒரு அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோகும் என்றால் அது தென் ஆப்ரிக்க அணிக்குதான். 


உலகின் எந்த பந்துவீச்சாளரையும் சிதைக்கும் பேட்ஸ்மேன்கள், எப்பேர்பட்ட பேட்ஸ்மேனையும் க்ளீன் போல்ட் செய்யும் வல்லமை படைத்த பந்து வீச்சாளர்கள், ’டூ ஆர் டை’ மனநிலையில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்கள் என தென் ஆப்ரிக்க அணி எப்போதும் வலுவான அணியாகவே உலகக்கோப்பைக்குள் நுழையும். அப்படியான அணிக்கு உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற சோக கதைகள் குறித்து இங்கு காணலாம். 




ஒரு பந்துக்கு 22 ரன்கள்


1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியும் இங்கிலாந்தும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் - அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. எனவே போட்டி முடிவை எட்ட டக்வெர்த் லூயிஸ் முறை பின்பற்றப்பட்டது. அந்த விதிப்படி தென் ஆப்ரிக்க அணி 1 பந்தில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டதும் ஒட்டுமொத்த தென் ஆப்ரிக்க அணியின் உலகக்கோப்பைக் கனவும் நொருங்கிப்போனது. 


கடைசி ஓவர் சோகம்


1999ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்ரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை 213 ரன்களில் சுருட்டியது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை எனும் நிலையில் இருந்தது. கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருந்தது. முதல் இரண்டு பந்தினை பவுண்டரிக்கு விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, கடைசி ஓவரின் 4வது பந்தில் 10வது விக்கெட்டை இழந்தது. இதனால் போட்டி டிரா ஆக, சூப்பர் சிக்ஸ் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மட்டும் இல்லாமல் கோப்பையையும் கைப்பற்றியது. 




மீண்டும் குறுக்கே வந்த மழை


2003ஆம் ஆண்டு உலகக்கோபையை தென் ஆப்ரிக்க அணி கென்யா மற்றும் ஜிம்பாவேவுடன் இணைந்து நடத்தியது. இதில் லீக் சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணி கட்டாய வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 268 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியினை மேற்கொண்டு நடத்த முடியவில்லை. இறுதியில் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. 45வது ஓவரின் கடைசி பந்தினை எதிர்கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் பவுச்சர் ஒரு ரன் எடுத்து இருப்பார். அந்த பந்தில் அவர் இரண்டு ரன் எடுத்து இருந்தால் கூட தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றிருக்கும். 




சொந்த நாட்டுக்காரரால் சூனியம்


2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தது. தென் ஆப்ரிக்க அணி நன்றாக விளையாடினாலே தொந்தரவு செய்ய வரும் மழை அன்றைக்கும் வந்தது. போட்டியின் 38வது ஓவரின்போது மழை வந்ததால் நீண்ட நேரம் போட்டி தடைபட்டது. இதனால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நியூசிலாந்து அணி சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்விக்கு அருகில் சென்றது. இதனால் முதல் முறையாக தென் ஆப்ரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவுள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய எல்லியாட் என்ற வீரர் இறுதியில் அதிரடி காட்டினார். அவர் 73 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் என 84 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியை வெற்றி பெறவைத்தார். ஆனால் எல்லியாட்டின் சொந்த நாடு தென் ஆப்ரிக்கா. அவர் அங்கு தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இந்த போட்டியின் தோல்விக்குப் பின்னர் ஒட்டுமொத்த  தென் ஆப்ரிக்க அணியும் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுததைப் பார்த்தபோது மிகவும் கவலை அடைந்தது கிரிக்கெட் ரசிகர் பட்டாளம். 




தண்ணியில் கண்டம்


2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியை தென் ஆப்ரிக்க அணி எதிர் கொண்டது. இந்த போட்டியின் போதும் மழை வந்ததால், போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வில்லியம்சனின் ரன் அவுட் வாய்ப்பை மில்லர் வீணடித்ததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 


தென் ஆப்ரிக்க அணி எப்போதெல்லாம் நாக்-அவுட் நிலையில் போட்டியில் பங்கேற்கிறதோ அப்போதெல்லாம் மழை குறுக்கீடு என்பது இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இதனால் மழை வந்துவிட்டால் தென் ஆப்ரிக்க அணி தனது சொந்த ஊருக்கு மூட்டை முடுச்சுகளை கட்டத் துவங்கலாம் என கிண்டல் செய்யும் அளவிற்கு வரலாறுகள் உள்ளது. இந்த வரலாறு வரும் காலங்களில் மாறும் என தென் ஆப்ரிக்க அணி நம்பிக்கொண்டுள்ளது. பார்க்கலாம் வரும் காலம் எப்படியோ!