ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள், செப்டம்பர் 10ம் தேதி மோத உள்ளன.


ஆசியக்கோப்பை தொடர்:


ஆசியக்கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் நடைபெறும் மற்ற போட்டிகளை காட்டிலும், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும், ஒருநாள் போட்டியில் மோதியதால் வெற்றி யாருக்கு என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.


இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து:


அதன்படி, கடந்த 2ம் தேதி நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இந்திய அணி தடுமாறினாலும் இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தால் 266 ரன்களை குவித்தது. ஆனால், இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன்பே கடும் மழை பெய்து போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.


சூப்பர் 4 சுற்றில் இந்தியா..!


இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 230 ரன்களை சேர்த்தது. ஆனால், இரண்டாம் பாதியில் மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள், 20.1 ஓவரில் 147 ரன்களை சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை தேடி தந்தனர். இதன் மூலம் ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.


மேலும் படிக்க: 800 Trailer: இன்று வெளியாகும் ட்ரெய்லர்..முரளிதரனை கண் முன் நிறுத்திய மோஷன் போஸ்டர்.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் 800 திரைப்படம்..!


மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி:


தொடர்ந்து, இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை  பிடித்த அணிகள் விளையாடும், சூப்பர் 4 சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற உள்ளது. அதில், வரும் 10ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதனால் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம், இந்த போட்டி மழையால் பாதிக்கப்படாமல் முழுமையாக நடைபெற வேண்டும் எனவும் வருண பகவானை பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர்.


வானிலை அறிக்கை:


போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் செப்டம்பர் 10ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தம்புல்லாவில் உள்ள மைதானத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.