ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு விளக்கமளித்தார்.
செய்தியாளர் சந்திப்பு:
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் என்ன மாதிரியான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. நான்கு நாட்களில் என்ன முடிவு எடுக்க முடியும்? பெரும்பான்மை இருப்பதனால் நடைமுறைக்கு மாறாக பல்வேறு விவகாரங்களை பாஜக அரசு செய்கிறது. என்ன நடக்கிறது நாடாளுமன்றத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
டி.ஆர். பாலு கருத்து:
நாட்டின் பெயரை பாரதம் என மாற்றுவது தொடர்பான கேள்விக்கு, “பாரதம் என்பது ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. அதனை எதிர்க்க முடியாது. பாரதம் என்ற வார்த்தை நீண்ட நாட்களாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைத்ததால், இந்தியா என்ற பெயரை அவர்கள் உபயோகிக்க பயப்படுகிறார்கள். நாளை தேர்தல் நடந்தால் அது மோடி Vs I.N.D.I.A என்று தான் இருக்கும். இதனை லட்சக்கணக்கானோர் சொல்ல போகின்றனர். பாரத் என சொல்வதால் மட்டும் அவர்களால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெறுவதற்கு இதனை ஒரு வழியாகவும் அவர்கள் கருதுகின்றனர். அதனால், ஒன்றும் நடக்கப்போவதில்லை” என டி.ஆர். பாலு விளக்கமளித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு:
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாரத குடியரசுதலைவர்:
அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்:
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே நாட்டின் பெயர் பாரத் என்பதையே இனி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் என கூறி இருந்தார். இதேபோன்று பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கூட, இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்நிலையில் தான் வழக்கமாக குறிப்பிடுவதை போன்று அல்லாமல், ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை “பாரதம்” என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி வரலாற்றை திரித்து இந்தியாவை பிரிக்கலாம். அதனால் எங்களை தடுக்க முடியாது” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.