நியூசிலாந்து-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸில் கேப்டன் டாம் லெதம் 252 ரன்கள் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி டிரென்ட் போல்ட் வேகத்தில் வேகமாக விக்கெட்களை பறிகொடுத்தது. முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி ஃபாலோ ஆன் வழங்கியது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி அதிலும் சொதப்ப தொடங்கியது. 


 






இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் லிட்டன் தாஸ் மட்டும் 102 ரன்கள் அடித்து அசத்தினார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன் அடிக்கவில்லை இறுதியில் பங்களாதேஷ் அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் அடைந்த படு தோல்விக்கு இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி பழி தீர்த்து கொண்டது. 


 






இந்தப் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் அவர் பேட்டிங் செய்ய வரும் போது பங்களாதேஷ் வீரர்கள் அவருக்கு கார்ட் ஆஃப் ஹானர் வழங்கி கௌரவித்தனர். அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ராஸ் டெய்லர் பந்துவீசினார். அப்போது ஆட்டத்தின் கடைசி விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு விக்கெட் வீழ்த்தி தன்னுடைய டெஸ்ட் வாழ்க்கையை முடித்து கொண்டார். 


 


நியூசிலாந்து அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஸ் டெய்லர் 7655 ரன்களை அடித்துள்ளார். மேலும் 19 சதம் மற்றும் 35 அரைசதங்களை இவர் டெஸ்ட் போட்டிகளில் அடித்து அசத்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இவர் அறிமுகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சானிடைசர், மாஸ்க் வைத்து விக்கெட்டை கொண்டாடிய பாக். வீரர்- வைரல் வீடியோ !