சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை கோப்பையை வென்றதோடு சேர்த்து தனது ஐபிஎல் வாழ்க்கையில் ஆறாவது கோப்பையை பார்த்த அம்பதி ராயுடுவுக்கு அந்த போட்டியே கடைசி. இந்திய கிரிக்கெட்டின் உண்மையான திறமைகளில் ஒருவரான ராயுடு, அவரது தேசிய அணிக்காக அவர் பெரிய அளவில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலரிடம் உள்ளது. இந்தியாவுக்காக 55 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியும் ராயுடுவால் பிளேயிங் லெவன் அணியில் நிரந்தர இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது யுவராஜ் ஆடிக்கொண்டிருந்த நம்பர் 4 இடம் காலியான நிலையில், அப்போது நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்தார் ராயுடு.
ராயுடுவின் ஃபார்ம்
செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 க்கு இடையில், ராயுடு இந்தியாவின் நம்பர் 4 வெற்றிடத்திற்கு விடையாக செயல்பட்டார். ஐபிஎல் 2018 இல் விளையாடிய அவர் 602 ரன்களை விளாசி T20 பேட்டிங்கில் உச்சத்தை எட்டினார். ராயுடு அந்த ஆறு மாத காலப்பகுதியில் 21 ODIகளில் மிகவும் நேர்த்தியாக விளையாடினார். ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் உட்பட 639 ரன்கள் எடுத்தார். இவை கண்டிப்பாக மோசமான எண்கள் அல்ல என்றாலும், இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, ராயுடுவின் பெயர் வியக்கத்தக்க வகையில் காணாமல் போனது. அவருக்கு பதிலாக நம்பர் 4 இல் கே.எல்.ராகுல் இறக்கபட்டார். ராயுடுக்கு பதிலாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் செயல்படுவார் என விஜய் ஷங்கரை அழைத்து சென்றனர்.
கோலி, ரவி சாஸ்திரி செய்த தவறு
ராயுடுவை 2019 உலகக் கோப்பைக்கு அழைத்து செல்லாதது ஒரு தவறு என்று கும்ப்ளே கூறுகிறார். அந்த விவாதத்திற்குரிய முடிவால் நாம் கோப்பையை இழந்தோம் என்கிறார். ராயுடு அவரது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த நேரம் அது. சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ராயுடுவை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லாதது ஒரு தவறு என்று கருதுகிறார். ராயுடுவை அந்த குறிப்பிட்ட பாத்திரத்திற்கு ஆறு மாதங்களாக தயார் செய்து பின்னர் கடைசி நிமிடத்தில் ராயுடுவை நீக்கியது அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்த மிகப்பெரிய தவறு என முன்னாள் இந்திய பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ராயுடு இல்லாமல் போனது ஆச்சர்யம்
"ராயுடு 2019 உலகக்கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அது ஒரு பெரிய தவறு. அவரை இவ்வளவு காலம் அந்த பாத்திரத்திற்கு தயார் செய்தீர்கள், ஆனால் கடைசி நேரத்தில் அவருடைய பெயர் அணியில் இல்லாமல் போனது ஆச்சரியமாக இருந்தது" என்று கும்ப்ளே குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸுக்குப் பிறகு மழையால் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி நிறுத்தப்பட்டபோது ஜியோ சினிமாவில் கூறினார்.
ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கை
ராயுடுவை அவுட்டாக்கும் முடிவு பல விளைவுகளை ஏற்படுத்தியது. தேர்வில் தெளிவாக குழப்பமடைந்த ராயுடு, 'விஜய் சங்கர் ஒரு 3டி (3 பரிமாண) வீரர்' என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு, "உலகக் கோப்பையைப் பார்க்க புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன்" என்று ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட்டை வெளியிட்டார்.
ராயுடு அதை திரும்பப் பெறுவதற்கு முன்பு இந்தியாவின் உலகக் கோப்பை பிரச்சாரத்தின் நடுவில் தனது ஓய்வை சுருக்கமாக அறிவித்தார். துரதிர்ஷ்டவசமாக, ராயுடு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடவில்லை, இது ஒரு சர்வதேச வாழ்க்கையின் மிகவும் மர்மமான முடிவுகளில் ஒன்றாக இருக்கும்.