நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவிற்கு பாலியல் வழக்கில் கடந்த ஜனவரி மாதம் எட்டு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.


பலியல் வன்கொடுமை வழக்கு:


நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் சந்தீப் லாமிச்சானே. இவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து 18 வயது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.


அப்போது, சந்தீப் லாமிச்சானே கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர், சந்தீப் லாமிச்சானே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப் லாமிச்சானே வங்கிக் கணக்கு சீல் வைக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சந்தீப்:


இந்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் குற்றத்தின் அடிப்படையில் லாமிச்சானேவை சுந்தராவில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 2023ம் தேதி சந்தீப் லாமிச்சானே நிபந்தனை அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார். அப்போது, நீதிபதி துருவ்ராஜ் நந்தா மற்றும் நீதிபதி ரமேஷ் தஹல் ஆகியோர் அடங்கிய பதான் உயர்நீதிமன்றத்தின் கூட்டு பெஞ்ச் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சில நிபந்தனைகளுடன் சந்தீப்பை விடுவிக்க உத்தரவிட்டநிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.


விடுதலை செய்த உயர்நீதிமன்றம்:


நேபாள மாவட்ட நீதிமன்றம் இவரை குற்றவாளி என்று அறிவித்து சிறைத் தண்டனை விதித்த நிலையில் தற்போது படான் உயர்நீதிமன்ற, சந்தீப்பை குற்றவாளி இல்லை என்று கூறி இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


கிரிக்கெட் வாழ்க்கை:


சந்தீப் லாமிச்சானே நேபாளத்திற்காக 51 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் ஒருநாள் போட்டியில் 112 விக்கெட்டுகளையும் டி20 இல் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  இது தவிர ஐபிஎல்லில் விளையாடிய முதல் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே ஆவார். சந்தீப் லமிச்சனே ஐபிஎல் 2018 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விளையாடிய ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார்.


அதில் அவர் 9 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இச்சூழலில் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை நேபாள அணியில் இடம்பெற்றுள்ள சந்தீப் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: RR vs PBKS LIVE Score: வெற்றியுடன் தொடரை முடிக்குமா பஞ்சாப்? ராஜஸ்தானுக்கு எதிராக சற்று நேரத்தில் பலப்பரீட்சை!


மேலும் படிக்க: RCB vs CSK: எல்லாமே 18! சென்னைக்கு எதிராக ஆர்.சி.பி.யின் சாதகமும், சவால்களும்!