இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி உலகக்கோப்பையை கடந்த 2011ம் ஆண்டு வென்றதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான். ஜாகீர் கான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் முழுவதும் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்தார். 


ஆஸ்திரேலியாவுக்காக ஆடினாரா ஜாகீர்கான்:


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்கின்றது என்றால், அதில் கட்டாயம் விவாதிக்கப்படும் ஒரு பெயர் ஜாகீர் கான். ஜாகீர் கான் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளரை அவருக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளராக ஒருவர் சிறப்பாக பந்து வீசினாலும் அவர்களால் ஜாகீர் கான் போன்று ஸ்விங் செய்யமுடிவதில்லை. 


இப்படி இந்திய கிரிக்கெட் பவுலிங் லைனப்பின் ரத்தினமாக திகழ்ந்துள்ள ஜாகீர் கான். ஆனால் இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட்டினை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆமாம் ஜாகீர் கான் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணிக்காக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். இந்த போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான ஆட்டம் என்பதால் இது சர்வதேச போட்டி வரிசையில் கணக்கில் கொள்ளப்படவில்லை. 






முன்னாள் வீரர்கள் கலகல:


இந்த தகவலை தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஜியோ சினிமாவில் ஜாகீர் கான், முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டீரியஸ் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ ஆகியோர் இது தொடர்பாக பேசிக்கொண்டனர். ஜாகீர் கான் ஆஸ்திரேலியா அணிக்காக அடியெல்டில் நடைபெற்ற போட்டியில் விளையாடியுள்ளார். அப்போது ஆஸ்திரேலியா அணியில் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் இருந்துள்ளார். இந்த தகவலை ஸ்காட் கூறும்போது, ஜாகீர் கான் மிகவும் மகிழ்ச்சியாக தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். 


2000ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மூன்று வகைக் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிய ஜாகீர் கான், மொத்தம் 92 போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 281 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். மேலும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் அதில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.