ஆர்.சி.பி-யும் நம்பர் 18ம்:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டன. அதேநேரம் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உட்பட 5 அணிகளுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடும் போட்டி நிலவிகிறது.


இந்நிலையில் மே 18 ஆம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இச்சூழலில் 18 என்ற நம்பருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையேயான தொடர்பை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


மே 18 ல் எப்படி விளையாடி இருக்கிறது பெங்களூரு:


கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மே 18 ஆம் தேதி அன்று இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.  இந்த தேதியில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை தோல்வி அடைந்ததில்லை. அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது பெங்களூரு. இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி சி.எஸ்.கேவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


கிங் கோலியின் ருத்ரதாண்டம்:


பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோலி இந்த போட்டியில் அதிகபட்சமாக 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். அதேபோல் கடந்த 2014 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் பெங்களூரு அணி தான் வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இருந்தது பெங்களூரு. இதில் விராட் கோலி 27 ரன்கள் எடுத்திருந்தார். 


கடந்த 2016 ஆம் ஆண்டு மே 18 அன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மழையின் காரணமாக இந்த போட்டி Duckworth–Lewis–Stern method (DLS) முறைப்படி 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க முடிந்தது. 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்களை குவித்திருந்தார் கிங் கோலி. 


தொடர் வெற்றி:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கடந்த 2023 ஆம் ஆண்டு மே 18 அன்று எதிர்கொண்டது பெங்களூரு அணி. நான்காவது முறையாக மே 18 ஆம் தேதி விளையாடி இந்த போட்டியிலும் பெங்களூரு அணி தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இருந்தது பெங்களூரு. விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்திருந்தார்.


இப்படி இதுவரை பெங்களூரு அணி மே 18 அன்று விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இச்சூழலில் தான் 5 வது முறையாக வரும் மே 18 அன்று சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது பெங்களூரு.


பிளேஆஃப் தகுதியும், 18ம்:


பெங்களூரு அணி 12 புள்ளிகளை பெற்று +0.387 என்ற ரன் ரேட்டில் இருக்கிறது. மே 18 ஆம் தேதி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடிக்க வேண்டும்.


இலக்கை நோக்கி களமிறங்கி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடினால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்ட வேண்டும். இப்படி 18 என்ற எண் பெங்களூரு அணிக்கு இந்த சீசனில் முக்கியமான ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதையெல்லாம் தாண்டி அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலியின் ஜெர்ஸி எண்ணும் 18 என்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க: IPL 2024 Playoffs: மொத்த லீக் போட்டியும் ஓவர்! இன்னும் பிளே ஆஃப்க்கு செல்ல டெல்லி கேப்பிடல்ஸுக்கு வாய்ப்பா..?


 


மேலும் படிக்க: Zaheer Khan: அப்படியா! இந்தியாவுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்காக ஆடிய ஜாகீர் கான் - எப்படி?