50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேபாள நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டிகள்(T20 World Cup 2024 Asia Qualifiers) நடைபெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று:
இதில், காத்மாண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியும், நேபாள அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க வீரர் முகமது வாசிம் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். மற்றொரு வீரர் காலித் ஷா 3 ரன்னில் அவுட்டானர். அவர் அவுட்டான அதே ஓவரில் சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் முகமது வாசிம் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அபார வெற்றி பெற்ற நேபாளம்:
அடுத்து வந்த ஆசிப் கான் 13 ரன்களிலும், அலிஷான் ஷராஃப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனாலும், விக்கெட் கீப்பர் அரவிந்த் அபாரமாக ஆடினார். அவரது பேட்டிங்கால் ஐக்கிய அரபு அமீரக அணியின் ஸ்கோர் ஏறியது. அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. நேபாள அணியின் குஷால் மல்லா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர குஷல் புர்டெல் 11 ரன்களில் அவுட்டானார். அதன்பின்பு, வந்த குல்ஷன் ஷாவுடன் இணைந்து ஆசிஃப் ஷேக் அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடியபோது குல்ஷன் ஷா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார்.
ஓமனும் தகுதி:
அடுத்து கேப்டன் ரோகித் களமிறங்கினார். அவரும் ஆசிப்பும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆசிப் ஷேக் பவுண்டரிகளாக விளாச, கேப்டன் ரோகித் அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். கடைசியில் நேபாள அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆசிப் 51 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64 ரன்களுடனும், கேப்டன் ரோகித் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதேபோல, கிரிதிபுரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பஹ்ரைனும், ஓமன் அணிகளும் மோதின. இதில் முதலில் பேட் செய்த பஹ்ரைன் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 14.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்களை எடுத்தது. அந்த அணியின் காஷ்யப் ப்ரஜாபதி 57 ரன்களும், பிரதிக் அத்வாலே 50 ரன்களும் எடுத்தனர்.
ரசிகர்கள் உற்சாகம்:
அடுத்தாண்டு உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டியாகவே இந்த தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் இரண்டும் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதேபோல, ஆப்பிரிக்க அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டிகளும் நடைபெற உள்ளது. அடுத்த உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றதன் மூலமாக நேபாளம் மற்றும் ஓமன் நாட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Team India Records: உச்சகட்ட ஃபார்மில் ஷமி - கோலி டூ ரோகித்.. உலகக் கோப்பையில் இந்தியா கொட்டிக் குவித்த சாதனைகள்