அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான ஐ.பி.எல். மினி ஏலம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பிரபல வீரர்களுடன் இளம் வீரர்களும் அதிக தொகைக்கு ஏலத்திற்கு சென்றனர். ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணி ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த விவ்ராந்த் சர்மாவை ரூபாய் 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.


அண்ணனின் தியாகம்:


இதுதொடர்பாக, இளம் வீரர் விவ்ராந்த் சர்மா கூறியிருப்பதாவது, "ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்றாகும். இது அனைத்தும் சாத்தியப்பட்டது எனது அண்ணனின் தியாகத்தால்தான். எனது அண்ணன் தனது கிரிக்கெட் ஆசைகளை தியாகம் செய்துவிட்டு என்னை வெற்றி பெற வைத்துள்ளார். அவர் இல்லாவிட்டால் நான் இங்கிருந்து இருக்க மாட்டேன். என்னை எடுப்பார்கள் என்று நான் நம்பினேன்.ஆனால், இவ்வளவு பெரிய தொகைக்கு எடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.




தியாகம்:


இளம் வீரரான விவ்ராந்த் சர்மாவின் அண்ணன் விக்ராந்த் சர்மா. இவர்களது தந்தை கடந்த 2020ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனால், அவரது தந்தையின் தொழிலை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு விக்ராந்திற்கு வந்தது. விக்ராந்த் வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என்று விரும்பினார். மேலும், அவர் படித்த பல்கலைகழகத்திற்காக வேகப்பந்து வீச்சாளராகவும் களமிறங்கியுள்ளார்.


ஆனால், அவரது தந்தை இறந்த பிறகு தாய் மற்றும் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் விக்ராந்திற்கு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கனவு சிதைந்தாலும், தனது தம்பியின் கனவு சிதைந்து விடக்கூடாது என்பதில் விக்ராந்த் உறுதியாக இருந்தார். இதனால், தனது தம்பியான விவ்ராந்தை அவரது ஆசையை நோக்கி பயணிக்க உறுதுணையாக இருந்துள்ளார்.


ஆல் ரவுண்டர்:






படிப்பில் பெரியளவில் ஆர்வம் இல்லாத விவ்ராந்த் கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்துள்ளார். விவ்ராந்த் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் ரஞ்சி கிரிக்கெட்டில் கடந்த இந்த மாத தொடக்கத்தில் அறிமுகமானார்.


உள்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சையத் அலி முஷ்டாக் அலி தொடரில் விவ்ராந்த் தன்னை நிரூபித்தார். நான்கு இன்னிங்சில் 128 ரன்களை எடுத்தார். அவரது சராசரி 145.45 ஆக இருந்தது. கர்நாடக அணிக்கு எதிராக 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜம்மு-காஷ்மீர் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கிய விவ்ராந்த் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். அவர் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 63 ரன்களை எடுத்தார். ஜம்மு – காஷ்மீர் அந்த போட்டியில் தோற்றாலும் அவரது அபார பேட்டிங் திறமை வெளிப்பட்டது. மேலும், அந்த தொடரில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.


இர்பான் பதானுக்கு நன்றி:


அதைத்தொடர்ந்து விஜய் ஹசாரா தொடரில் அவர்களது அணியின் 2வது அதிக ரன்ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்தார். 8 இன்னிங்சில் 395 ரன்களை எடுத்தார். உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 154 பந்துகளில் 124 ரன்களை விளாசியது அந்த தொடரில் இவரது சிறப்பான பேட்டிங் ஆகும். மேலும், அந்த தொடரில் 5 விக்கெட்டுகளையும் விளாசினார்.


யுவராஜ்சிங்கின் தீவிர ரசிகரான விவ்ராந்த் இர்பான்பதானுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், என்னிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. நான் தொடர்ந்து கற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Ben Stokes : ஸ்டோக்ஸை வாங்குங்கனு தோனி மெசேஜ் பண்ணாரா? சிஎஸ்கே சிஇஓ சுவாரஸ்ய பதில்..!


மேலும் படிக்க: IPL AUCTION: தொடர் சதங்களால் கவனம் ஈர்த்த தமிழக வீரர் ஜெகதீசன்.. முன்னாள் ஐபிஎல் சாம்பியன் அணியில் இடம்