ஐபிஎல் மினி ஏலம்:


2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான, மினி ஏலம் கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர். ஆல்-ரவுண்டர்களான சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிகோலஸ் பூரான் மற்றும் ஹாரி ப்ரூக்ஸ் ஆகியோர், அதிகப்படியான தொகைக்கு பஞ்சாப் மற்றும் மும்பை உள்ளிட்ட அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.






 


ஏலத்தில் ஜெகதீசன்:


அந்த வரிசையில், தமிழக வீரர் ஜெகதீசனை, ரூ.90 லட்சத்துக்கு, இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி ரூ.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி ரூ.25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன. 


ஜெகதீசனை பாராட்டிய கொல்கத்தா அணி:


அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில், அடுத்தடுத்து 5 சதங்களை அடித்து ஜெகதீசன் அசத்தினார். அதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்தார். அதைதொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் ஜெகதீசன் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதனடிப்படையில் தற்போது ஜெகதீசனை, கொல்கத்தா அணி ரூ.90 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதைதொடர்ந்து, கொல்கத்தா அணி வெளியிட்டுள்ள டிவிட்டர்பதிவில், நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் ஜெகதீசனின் செயல்பாடு இப்படி தான் இருந்தது என பாராட்டி, அவர் இரட்டை சதம் விளாசிய ஸ்கோர் விவரங்களை குறிப்பிட்டுள்ளது.