ஸ்டார் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான எம்.எஸ். தோனி, நேற்று (புதன்கிழமை) இந்தியா சந்திராயன்-3 மூலம் செய்த உலக சாதனையைக் கண்டு பெருமை கொண்ட தருணம் வீடியோவாக வெளியாகி வைரல் ஆகி வருகிறது.


சந்திரயான்-3 வெற்றி


நேற்று சந்திரயான்-3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா வரலாற்றில் பதிவு செய்தது. சந்திரயான்-3 லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொடுவதை உலகமே காணும் வகையில், லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. நிலவைத் தொட்ட அந்த தருணம் எண்ணற்ற இந்தியர்களால் போற்றப்பட்டது. பலரும் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வாழ்த்து தெரிவித்தனர். 






கண்டு ரசித்த தோனி


கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையில், சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கியதைக் கண்டு, முன்னாள் இந்திய கேப்டன் தோனி பெருமைப்பட்டு பாராட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டப்ளினில் இந்திய கிரிக்கெட் அணி இந்த முழு காட்சியையும் நேரலையில் பார்த்தது. ஆனால் பின்னர் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.






ரஷ்ய விண்கலம் தோல்வி


சந்திரயான்-3 புதன் கிழமை மாலை 6.03 மணிக்கு நிலவின் தென் துருவத்தைத் தொட்டது. உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற கூறுகள் இருக்கும் என்று நம்பப்படும் நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் இறங்கவில்லை. ரஷ்யாவின் தென் துருவத்தை நோக்கிச் சென்ற லூனா-25 விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து நிலவில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: Chandrayaan 3 EXCLUSIVE: சந்திரயான் சரித்திர வெற்றி; என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி!


ஆய்வைத் தொடங்கிய ரோவர் 


பாதுகாப்பாக தரையிறங்கி உள்ள, 'விக்ரம்' லேண்டர் தனது பணியைச் சிறப்பாக செய்துள்ள நிலையில், அதற்குள் இருக்கும் 'பிரக்யான்' எனப்படும் ரோவர் தரையில் இறங்கி நிலவின் மேற்பரப்பில் தொடர் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் ஒட்டுமொத்த மனித அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் புதியவையாக இருக்கும். அவை வரும் நாட்களில் வெளிவர உள்ளன.