இந்தியாவின் சந்திரயான் -3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், உலக நாடுகள் முழுவதும் இந்திய நாட்டை திரும்பி பார்த்து பெருமை கொள்கிறது. அதே நேரத்தில், சந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நிலவில் விண்கலம் தரையிறங்கியதை பார்த்து கைதட்டி பெருமை கொண்டனர்.
தற்போது, இதுகுறித்தான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா உட்பட, அணியின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் பூரித்து கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வரலாறு படைத்த இந்தியா:
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதன் மூலம், இந்தியா வரலாறு படைத்தது. இதன்மூலம், நிலவுக்கு விண்கலங்களை அனுப்பிய உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் இந்த சாதனையை செய்துள்ளன. நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் சென்றடையாத நிலையில், இந்தியா தென் துருவத்தில் சந்திரயான் -3 தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் சந்திரயான்-3 தரையிறக்கம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
போட்டி என்ன ஆனது..?
இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.
நேற்று நடைபெறவிருந்த இந்தியா-அயர்லாந்து இடையிலான 3 டி20 போட்டியில் தொடர்ந்து மழை பெய்தது. இதையடுத்து, போட்டியை ரத்து செய்ய நடுவர்கள் முடிவு செய்தனர். இதனால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.
உள்ளூர் நேரப்படி 5.45 நிமிடங்களில் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து போட்டியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது, ஆனால் மழை காரணமாக, போட்டியை இரவு 10.30 மணியளவில் ரத்து செய்ய நடுவர்கள் முடிவு செய்தனர். இதன் மூலம் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி முடிவு இன்றி முடிந்தது.
தொடரை வென்ற இந்தியா:
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அயர்லாந்தை வீழ்த்தியது. ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், இரு அணிகளுக்கு இடையிலான தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3 டி20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி மழை பெய்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.