இந்திய கிரிக்கெட் அணி:
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்தது.
தற்போது நாடு திரும்பிய இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பின்னர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அதன்படி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான கணக்கில் எடுக்கப்படும் என்பதால் முக்கியமான போட்டியாக இருக்கும். அதேநேரம் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பயிற்சிகளை ஆரம்பித்து விட்டேன்:
இச்சூழலில், கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் விளையாட தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி பேசுகையில், “தற்போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து நல்ல முறையில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். இப்போதும் எனக்கு சிறிய வலி உள்ளது. ஆனாலும் பரவாயில்லை எனது பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டேன். நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் நான் இடம் பிடிக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். அதன்படி, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் முகமது ஷமியின் பந்து வீச்சு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இச்சூழலில் தான் விளையாட தயாராக இருப்பதாக முகமது ஷமி கூறியிருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க: Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் வெற்றி பாதைக்கு திரும்ப என்ன செய்யவேண்டும்? வர்ணனையாளர் டி.என்.ரகு கருத்து!
மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... முகமது ஷமியின் நிலை என்ன? விவரம் உள்ளே!