சமீபத்தில், ரோஹித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்னவென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை தனது பெயரில் பதிவு செய்தார். 


ரோஹித்சர்மா:


அதேநேரத்தில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விரைவில் தனது பெயரில் மற்றொரு சாதனையை படைக்கவுள்ளார். வருகின்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்களை அடித்தால், கேப்டனாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைப்பார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் ஜனவரி 11ம் தேதி சந்திக்கிறது. 


இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் கேப்டனாக ரோஹித் சர்மா இதுவரை 82 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கேப்டனாக 86 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். 82 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். 


அதிக சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா ஆதிக்கம்: 


இந்திய அணிக்காக ரோஹித் சர்மா 148 டி20 போட்டிகளில் விளையாடி,182 சிக்சர்களை அடித்துள்ளார். இது தவிர, ரோஹித் சர்மா 262 ஒருநாள் போட்டிகளில் 323 சிக்சர்களையும், 54 டெஸ்ட் போட்டிகளில் 77 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 243 போட்டிகளில் விளையாடி 257 சிக்சர்களை அடித்துள்ளார்.


தற்போது, ​​ரோஹித் சர்மா வருகின்ற ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக செயல்படுவாரா? இல்லையா? என்பது தெரியாது. இருப்பினும், ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் விளையாடுவார் என்று தெரிகிறது.  இதற்கு முன், டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


14 மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்கு திரும்பினார் ரோஹித் சர்மா:


கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் மொஹாலியில் நேருக்கு நேர் மோதுகின்றன.


இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜனவரி 17ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 


டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சர்வதேச அளவில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. ஆப்கானிஸ்தான் தொடருக்கு அவர்களின் பெயர்கள் வருவதற்கு முன்பு, இப்போது இந்த இரண்டு ஜாம்பவான்களும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே விளையாடி வந்தனர். எனவே, வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை அணியில் ரோஹித், கோலி இருக்க மாட்டார்கள் என்றும் ஊகிக்கப்பட்டது. ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் தேர்வாளர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.