புரோ கபடி லீக்:
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. 2 போட்டிகளில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதன்படி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விளையாட்டு வர்ணனையாளர் டி.என்.ரகு பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ் தலைவாஸ் அணி சிறந்த அணிகளில் ஒன்று. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால், அவர்கள் பதற்றத்துடன் விளையாடுகிறார்கள். அவர்களிடம் முதிர்ச்சி குறைவாக உள்ளது. முக்கிய கட்டத்தில் அவர்கள் சரியாக விளையாடுவதில்லை.
நல்ல கேப்டன் வேண்டும்:
பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போன்ற அணிகளுடன் மோதியபோது வெற்றி பெற்று இருக்கலாம். எளிதில் வெற்றி பெறவேண்டிய இந்த போட்டிகளை அவர்களுக்கு சரியாக முடிக்க தெரியவில்லை. இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. களத்தில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு லீடர் இல்லை. இக்கட்டான கட்டத்தில் களத்தில் முடிவு எடுக்க ஒரு நல்ல கேப்டன் வேண்டும்.
கடந்த சீசனில் பவன் செராவத் காயம் அடைந்து வெளியேறிய பிறகு, அணியிடம் இருந்து பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதனால், வீரர்கள் எந்த அழுத்தமும் இன்றி விளையாடினார்கள். இந்த சீசனில் நவீன்குமாரின் காயத்திற்குப் பிறகு டெல்லி அணி எப்படி விளையாடி வருகிறார்களோ, அப்படி தான் கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியினர் விளையாடினார்கள். நம்பிக்கையுடன் அழுத்தம் இல்லாமல் அவர்களால் விளையாட முடியவில்லை. இவைதான் முக்கிய காரணங்களாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்... இந்திய வீரர் விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்! விவரம் உள்ளே!
மேலும் படிக்க: Virender Sehwag: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர்: சேவாக் வைத்த முக்கிய கோரிக்கை!