இந்திய கிரிக்கெட் அணி:


தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி போட்டியை சமன் செய்தது.


கே.எல்.ராகுல் தலைமையிலான ஒரு நாள் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:


இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜனவரி 11 ஆம் தேதி விளையாட இருக்கிறது இந்திய அணி. இதனை அடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25-ம் தேதி முதல் தொடங்குகிறது.


 முன்னதாக இந்தியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதன்படி, இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ், சோயப் பஷீர், பென் ஃபாக்ஸ் மற்றும் ஒல்லி போப் என ஒன்பது பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ரெஹான் அகமது என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும், வேகப்பந்து வீச்சு பிரிவில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஒல்லி ராபின்சன், மார்க் வுட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


முகமது ஷமி மீதான எதிர்பார்ப்பு: 


இதனிடையே இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.


இந்நிலையில்தான் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் எதிரணி வீரர்களை மிரட்டிய முகமது ஷமி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டி 20 போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள், டெஸ்ட் தொடர் அதோடு தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஷமி விளையடவில்லை.


தீராத கணுக்கால் காயம்:


உலகக்கோப்பை போட்டியின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வில் இருக்கும் முகமது ஷமி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அவர் இன்னும் எந்தவொரு வலைபயிற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் என்சிஏவில் தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்த பின்னர்தான் அணியில் இடம் பிடிப்பார் என்றும் தெரிகிறது.


முன்னதாக, முகமது ஷமி அணியில் இடம் பெறாவில்லை என்றால் அவருக்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க: India vs South africa test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... இந்திய மண்ணில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?


மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!