டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 குரூப் 2 சுற்றில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் என ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பட்டியலிட்டுள்ளார்.


உலகம் முழுவதும் பல கோடி கண்களால் பார்க்கப்பட்ட சாதனை படைத்த இந்த ஆட்டத்தில் இந்திய டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.


160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி எப்போதும் முதல் பரபரப்பான இறுதி கட்டத்தில் திரில் வெற்றி அடைந்தது. டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் சொதப்ப, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலியும், 6வது வீரராக களம் புகுந்த ஆல்-ரவுண்டரும், குஜராத் ஐபிஎல் அணியின் கேப்டனுமான ஹார்திக் பாண்டியாவும் நிதானமாக பொறுப்புடன் விளையாடினர்.


விராட் கோலி அரை சதம் பதிவு செய்ததுடன் கடைசி 2 ஓவரில் சிக்சர்களை விளாசி 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொஞ்ச காலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்த கோலி, தற்போது மீண்டும் கிங் கோலியாக உருவெடுத்ததை நினைத்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மகிழ்ந்தது.


ஹார்திக் பாண்டியா அந்த ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்து பாபர் ஆஸாமிடம் கேட்ச் ஆனார். கடைசியில் தமிழரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவ்வாறாக 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.


Virat Kohli: ஒரே போட்டி.. ஓராயிரம் சாதனை..! மொத்த ரெக்கார்டையும் கொத்தாக அள்ளிய "கிங்" கோலி..!


விராட் கோலியிடம் இருந்த கற்க வேண்டிய பாடங்கள்


இந்த ஆட்டத்தில் நிதானமாகவும், பொறுப்புடனும் விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து பலரும் பல பாடங்களை கற்றிருப்போம். அதாவது, மிகவும் நெருக்கடியான நேரங்களில் எப்படி பொறுமையாக செயல்பட வேண்டும், இலக்கை எப்படி திட்டமிட்டு அடைவது போன்ற பாடங்கள் பள்ளி மாணவர்கள் முதல் அனைவருக்கும் பொருந்தும்.


2009ம் ஆண்டு பிரிவு சத்தீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் டுவிட்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கோலியிடம் இருந்து கற்க வேண்டிய 5 பாடங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது:


1. உங்கள் கெட்ட நேரம் கூட நிலையற்றது. 
2. உங்கள் செயல்பாட்டின் மூலம் மட்டுமே நீங்கள் பதிலளிக்க முடியும்.
3. கடைசி நிமிடம் வரை உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்.
4. பொதுமக்களின் நினைவாற்றல் மிகக் குறைவு. 
5. தன்னம்பிக்கை வளரும்போது, ​​கடினமான சூழ்நிலைகள் கூட எளிதாகத் தோன்றும் என்று அந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீரர் கோலியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாக அவர் குறிப்பிட்டுள்ளார்.