உலகமே கடந்த இரு தினங்களாக அதிகமாக உற்று நோக்கியது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியைதான். எங்கு பார்த்தாலும் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றிதான் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 


பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மசூத் 52 ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்திருந்தனர். 


இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி தலா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். 


160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 31 ரன்களுக்குள்ளே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாட இந்திய அணி கடைசி பந்தில் 160 ரன்களை எட்டி திரில் வெற்றி பெற்றது. 


விராட் கோலி கடைசி வரை அவுட் ஆகாமல் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது. 


இந்தநிலையில், தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது சக வீரர்களிடையே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "இது ஒரு நல்ல போட்டி. எப்பொழுதும் போல் நாம் சிறப்பாக முயற்சி செய்தோம். ஆனால் சில தவறுகள் நடந்தது. அந்த தவறுகளில் இருந்து, நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தோல்வியால் நாம் விழக்கூடாது. போட்டி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்னும் நிறைய போட்டிகள் உள்ளது, அதை நினைவில் கொள்ளுங்கள்.






யாரும் இங்கு வீழ்ந்து விடவில்லை. அதேபோல், ஒரு தனிப்பட்ட நபரால் நாம் இங்கு தோற்கவில்லை. ஒரு அணியிடம் மட்டுமே தோற்றோம். யாரும் இங்கு இவர்தான் தோல்விக்கு காரணம் என்று விரல் நீட்டக்கூடாது. இது இந்த அணியில் நடக்கக் கூடாது. அனைவரும் ஒன்றாகவே இணைந்திருப்போம். நாம் அனைவரும் நன்றாகவே விளையாடினோம். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நாம் சில தவறுகளைச் செய்துள்ளோம், இப்போது அவற்றைச் சரிசெய்வோம்.” என்றார். 


கடைசி ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸிடம் பந்து வீசப்பட்ட போது இந்திய அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப் பந்து வரை ஆட்டத்தை எடுத்துச் சென்ற நவாஸையும் பாபர் பாராட்டினார்.


தொடர்ந்து பேசிய அவர், “ நாம் ஒன்றாகவே விளையாடினோம், ஒன்றாகவே தோல்வியுற்றோம். கவலைப்படாதே நவாஸ், நீங்கள்தான் உண்மையான மேட்ச் வின்னர், உங்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கும். நீங்கள் எனக்காக அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சி மிகவும் நன்றாக இருந்தது. இது ஒரு பிரஷர் கேம், ஆனால் நீங்கள் போட்டியை நெருக்கமாக எடுத்துச் சென்றீர்கள். அதற்கு என் பாராட்டுகள்” என தெரிவித்தார்.