ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலககோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலி, அரை சதம் கடந்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ளார். அந்த சாதனைகளை அத்தனையும் பட்டியல்களாக பின்வருமாறு :
சர்வதேச டி20க்களில் அதிக ரன்கள் :
கோலி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில், சக இந்திய வீரரான ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி 3794 ரன்களுடன் முதலிடம் பிடித்தார். 3741 ரன்களுடன் ரோகித் சர்மா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி தற்போது 110 போட்டிகளில் 51.97 சராசரி மற்றும் 138.41 ஸ்டிரைக் ரேட்டில் 3794 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக ஆட்டநாயகன் விருது :
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய விராட் கோலி நேற்று ஆட்டநாயகன் விருது பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 14வது ஆட்டநாயகன் விருதாகும். இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபியின் 13 விருதுகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் ஆறாவது ஆட்டநாயகன் விருது :
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு இது 6வது ஆட்ட நாயகன் விருதாகும். இதுவரை டி20 உலகக் கோப்பையில் யாரும் இத்தனை ஆட்ட நாயகன் விருது பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக அரைசதம்:
பாகிஸ்தானுக்கு எதிராக கோலியின் ஐந்தாவது அரை சதம் இதுவாகும். அவற்றில் நான்கு டி20 உலகக் கோப்பையில் அடிக்கப்பட்டவை. டி20 உலகக் கோப்பையில் எதிரணிக்கு எதிராக எந்த வீரரும் அதிக அரைசதம் மேல் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு அரைசதம் அடித்துள்ளார்.
ஆட்டமிழக்காத போட்டியில் எல்லாம் வெற்றி :
உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காத அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலககோப்பையில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் விராட்கோலி அரைசதம் விளாசியுள்ளார்.