இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷியுடன் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் முதன் முதலில் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. 


சினிமா தயாரிக்கும் தோனி


இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுள் மிகவும் ஸ்பெஷல் தமிழ் ரசிகர்கள் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் துவங்கிய காலத்தில் இருந்து சென்னை அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், தமிழ்நாடு ரசிகர்கள் சிஎஸ்கே-வுக்கு அளித்த ஆதரவு சிறப்பானது. அதற்காகவே இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த திரைப்படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் உருவாக்க விரைவில் தொடங்க உள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.



இயக்குநர் மற்றும் குழுவினர்


இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் 3டி வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுகத்தின் கிராஃபிக் நாவலாகும். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று படத்தரப்பு கூறுகிறது.


தொடர்புடைய செய்திகள்: ”துணையை தேர்வு செய்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்.. இதற்கு இடமில்லை..” : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து


இயக்குனர் பேட்டி


தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி இதுகுறித்து பேசுகையில், ''சாக்‌ஷி எழுதிய கதையின் கருவைப் படித்த போதே அதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. மிகவும் ஃப்ரெஷ்ஷாக இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வித்து, சிரிக்கவைக்கும் என்றும், சிந்திக்கவைக்கும் என்றும் நம்பினேன். அவர் இந்தக் கதையை, திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதை நான் பெருமையாகக் கருதுகிறேன்", என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.



அடுத்தடுத்த திட்டங்கள்


தமிழ் மட்டுமின்றி, இந்த நிறுவனம் இந்தியாவின் அனைத்து மொழித் திரையுலகிலும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட கதைகளை திரைப்படங்களாக தயாரித்து மக்களை மகிழ்விக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மட்டுமின்றி க்ரைம் டிராமா, சயின்ஸ் ஃபிக்ஷன், காமெடி, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான நல்ல, அர்த்தமுள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரான பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இது போன்ற டாக்குமெண்ட்ரிக்கள் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இது மட்டுமின்றி 'வுமன்'ஸ் டே அவுட் ' என்ற பெயரில் கேன்சர் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.