மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் சதத்தை எட்டிய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்.
76வது சர்வதேச சதம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டின், இரண்டாவது நாளில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தனது 29வது டெஸ்ட் சதத்தை எட்டினார். கடைசியாக கோலி வெளிநாட்டில் சதமடித்தது, 2018 டிசம்பரில் தான். பெர்த்தில் அடித்த அந்த சதத்திற்கு பின் ஐந்தாண்டுகள் கழித்து இந்த சதத்தை அடித்திருக்கிறார் விராட் கோலி.
அதோடு தன் கிரிக்கெட் வாழ்வில் சச்சினின் 100 செஞ்சுரிகள் என்னும் சாதனையை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு இன்னுமொரு படி முன்னே சென்றுள்ளார். இந்த செஞ்சுரி கோலியின் 76வது சர்வதேச சதம் ஆகும். தனது சதத்தை எட்டியதும், 34 வயதான ஸ்டார் பேட்டர் கிங் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்.
கோலியை பாராட்டி பதிவிட்ட சச்சின்
டெண்டுல்கர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விராட் கோலியை பாராட்டினார். கோலி பல சந்தர்ப்பங்களில் டெண்டுல்கரை தனது ரோல் மாடல் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அவரே அவரை பாராட்டி இருப்பது பலருக்கு நெகிழ்வான தருணமாக அமைந்தது. ஒரு ஸ்டோரியை வெளியிட்டு, ஜாம்பவான் சச்சின், “இன்னொரு நாள், @virat.kohli யின் இன்னொரு சதம். நன்றாக விளையாடினார்!" என்று எழுதினார். கோஹ்லியின் இந்த சதம் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் ஸ்கோரை பெரிதாக கட்டமைக்க மிகவும் முக்கியமானது. அதுவும் அவர் கிரீஸுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்திய அணி விரைவாக 2 விக்கெட்டுகளை இழந்தது மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
மெதுவாக தொடங்கி வேகமெடுத்த கோலி
கோஹ்லி பேட்டிங்கிற்கு வந்த பிறகு ரோஹித் சர்மா (80) மற்றும் அஜிங்க்யா ரஹானே (10) ஆகியோர் வெறும் நான்கு ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதனால் மெதுவாக ஆட்டத்தை தொடங்கிய கோலி, முதல் நாள் முடிவில் ரவீந்திர ஜடேஜாவுடன் 106 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் இருந்தார். அவர் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அடுத்த நாள் காலை, இருவரும் தங்கள் பார்ட்னர்ஷிப்பில் மேலும் 53 ரன்கள் சேர்த்தனர், அப்போது கோஹ்லி டெஸ் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 121 ரன்களில் ரன் அவுட் ஆனது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் விராட் கோலி டெஸ்டில் ரன் அவுட் ஆவது அரிதிலும் அரிது. அவரது இத்தனை ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் இது 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் சதகங்கள்
மார்ச் மாதம் அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 186 ரன்களை விளாசிய கோலியின் இந்த ஆண்டின் இரண்டாவது டெஸ்ட் சதம் இதுவாகும். செப்டம்பர் 2022 முதல், கோஹ்லி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் ஆறு சதங்களை அடித்துள்ளார். அதற்கு முன் மூன்று ஆண்டுகளாக அவரிடம் இருந்து சதங்கள் வராத நிலையில், மீண்டும் அவர் ஃபார்முக்கு திரும்பி 10 மாதங்களில் 6 சதங்கள் அடித்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான T20Iயின் போது கோலி முதல் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.