இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். இவருக்கும் பாலிவுட்டின் பிரபல நடிகருமான சுனில் ஷெட்டியின் மகளுமாகிய அதியா ஷெட்டிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.


விராட்கோலி அன்பளிப்பு:


பிரபலங்களான இவர்களின் திருமணங்களுக்கு மற்ற பிரபலங்கள் வாழ்த்துகளுடன் விலையுயர்ந்த ஆடம்பர பரிசுபொருட்களையும் அன்பளிப்பாக அளித்துள்ளனர். இந்திய அணியில் தோனியின் கேப்டன்சியிலும், விராட்கோலி கேப்டன்சியிலும் கே.எல்.ராகுல், ஆடியுள்ளார். இவர்களிடையே நல்ல உறவு உள்ளது. ரோகித்சர்மா உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கும் கே.எல்.ராகுலுக்கும் இடையேயும் நல்ல உறவு உள்ளது.




இந்த நிலையில், புதுமாப்பிள்ளையான கே.எல்.ராகுலுக்கு விராட்கோலி விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அந்த காரின் மதிப்பு ரூபாய் 2.17 கோடி ஆகும். மோட்டார் பைக்கின் மீது ஆர்வம் கொண்ட எம்.எஸ்.தோனி கே.எல்.ராகுலுக்கு ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள கவாஸ்கி நிஞ்சா இருசக்கர வாகனத்தை அன்பளிப்பாக அளித்தார்.


சல்மான்கானின் பரிசு:


பாலிவுட் பிரபலமான சல்மான்கான் புதுமணத் தம்பதிகளுக்கு ரூபாய் 1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை அன்பளிப்பாக அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுனில்ஷெட்டியுடன் பார்டர், ரெபூஜி மற்றும் பாஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் 30 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.


மணமகள் அதியாஷெட்டியின் நெருங்கிய நண்பரான அர்ஜூன்கபூர் 1.5 கோடி மதிப்புள்ள வைர ப்ரேஸ்லட்டை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கடந்த 23-ந் தேதி அதியா ஷெட்டி – கே.எல்.ராகுல் ஆகியோரது திருமணம் சுனில்ஷெட்டியின் சொகுசு பங்களாவிலே நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மிகவும் நெருங்கியவர்களை மட்டுமே இரு வீட்டாரும் அழைத்திருந்தனர்.


50 கோடி பங்களா:




மணமக்களாகிய கே.எல்.ராகுல் – அதியாஷெட்டிக்கு மணமகளின் தந்தையான சுனில்ஷெட்டி 50 கோடி மதிப்புள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் பிரபலங்களும் வாழ்த்துகளுடன் அன்பளிப்புகளை அளித்து வருகின்றனர்.


இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் - அதியாஷெட்டி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில்தான் இருவரது திருமணமும் மிகவும் நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதியாஷெட்டி பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:Suryakumar Yadav: 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் இவர்தான்...! - ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு..! ரசிகர்கள் கொண்டாட்டம்!


மேலும் படிக்க: Womens IPL Bidders: மகளிருக்கான ஐபிஎல் தொடருக்கான பெயர் இது தான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ