மகளிர் ஐபிஎல் தொடர்பாக அடுத்தடுத்த டிவிட்டர் பதிவுகள் மூலம், இந்திய கிரிக்கெட் சம்மேளன (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “மகளிருக்கான ஐபிஎல் தொடருக்கு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் மகளிர் பிரீமியர் லீக் என பெயரிட்டுள்ளது. இந்த பயணம் தொடரட்டும். நமது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்துக்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கான வழி. #WPL ஆனது பெண்கள் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் மற்றும் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பயனளிக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்யும். மகளிர் பிரீமியர் தொடருக்கான அணிகளுக்கான ஏலம் , 2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்களுக்கான ஐபிஎல் அணிகளின் ஏலத்தொகையை முறியடித்ததால், கிரிக்கெட்டில் இன்று ஒரு வரலாற்று நாள். ஐந்து அணிகளுக்கும் சேர்த்தும் மொத்த ஏலத்தில் ரூ.4669.99 கோடியை நாங்கள் பெற்றதால் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் வகுத்துள்ளது” என ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
அணிகளின் விவரங்கள்:
இதனிடையே, முதலாமாண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ள, 5 அணிகளை ஏலத்தில் எடுத்துள்ள நிறுவனங்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கு அதானி ஸ்போர்ட்ஸ் லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை அணியை ரூ. 912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், பெங்களூரு அணியை பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. டெல்லி அணியை ரூ.810 கோடிக்கு jsw gmr கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன. இதன் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4669.99 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
ஒளிபரப்பு உரிமை:
முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை 2023ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையில், ஒளிபரப்புவதற்கான உரிமையை வியாகாம் நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு போட்டியை ஒளிபரப்ப பிசிசிஐ-க்கு வியாகாம் நிறுவனம் ரூ.7.09 கோடி வழங்க உள்ளது.