டி20 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமைகள் குறித்து நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சஹலை அரையிறுதியில் ஆடும் லெவனில் சேர்க்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


1983 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு  வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ், அஸ்வின் குறித்து மேலும் கூறியதாவது:


நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் பந்துவீசும்போது அஸ்வினுக்கு தன்னம்பிக்கையும்  இல்லை. அவர் எடுத்த பெரும்பாலான விக்கெட்டுகள் பேட்ஸ்மேனின் தவறால் கிடைத்த விக்கெட்டுகள் ஆகும்.
ஆடும் லெவனில் அஸ்வின் பெயர் அடிபடவில்லை. ஆனால், அணி நிர்வாகம் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்தது. சூப்பர் 12 சுற்றில் யுஸ்வேந்திர சஹலுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சஹல், இந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.


இப்போது வரை அஸ்வின் எனக்கு நம்பிக்கையைத் தரவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அது பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் கிடைத்த விக்கெட்டுகள் ஆகும். விக்கெட்டுகளை எடுத்தால் நமக்கு அந்த பந்துவீச்சாளர் மீது நம்பிக்கை வரும். ஆனால், அதுபோன்ற நம்பிக்கையை அஸ்வின் நமக்கு தரவில்லை என்றார் கபில் தேவ்.


அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெறுவாரா என்று ஏபிபி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.


T20 World Cup 2022: எந்த அணி ஃபைனலுக்குத் தகுதி பெறும்..? தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஜாலி ட்வீட்


அதற்கு கபில் தேவ், "அன்றைய தினத்தைப் பொறுத்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் தான் தெரியும். அஸ்வின் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்தால் நல்லது. அவர் இந்த உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிவிட்டார். ஆனால், எதிரணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்றால் சஹலைக் கூட சேர்க்கலாம். இது கேப்டனும், அணி நிர்வாகமும் எடுக்க வேண்டிய முடிவு ஆகும்" என்றார்.


தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் 2 பிரிவு முதல் ஆட்டத்தில் வின்னிங் ஷாட் அடித்து அசத்தினார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


சூப்பர் 12 பிரிவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை சுருட்டினார். அந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.
எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.


இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி  அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.


சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற உலகக் கோப்பையை நடத்தும் அணியும் நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா வெளியேறியது. இலங்கை,  அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய பிற அணிகளும் வெளியேறின. அந்தச் சுற்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெளியேறின.