இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம், அறுவை சிகிச்சை ஆகிய காரணங்களால் தொடர்ந்து இந்திய அணியை விட்டு விலகியிருக்கிறார். மேலும், தற்போது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் வரும் ஐ.பி.எல். தொடரில் ஆடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா:


டெத் ஓவர் ஸ்பெலிஷ்ட் பும்ரா கடைசியாக இந்திய அணிக்காக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆடினார். அதன்பின்பு, இதுவரை இந்திய அணிக்காக களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


காயம் காரணமாக பும்ரா தவறவிட்ட தொடர்களை கீழே காணலாம்.



  • 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது 2வது ஒருநாள் போட்டியில் முதுகுவலிக்கு ஆளானார். இதனால், 3வது ஒருநாள் போட்டியில் அவர் ஆடவில்லை.

  • அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவதை காயம் காரணமாக தவறவிட்டார்.

  • காயத்தில் இருந்து மீண்டு வராத காரணத்தால் ஆசிய கோப்பையில் பும்ரா இடம்பெறவில்லை.

  • இரண்டரை மாதங்களுக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா ஆஸ்திரேலிய தொடரில் திரும்பினார்.

  • ஆனால், அதன்பின்பும் காயம் தீவிரம் அடைந்ததால் பும்ரா டி20 அக்டோபர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகினார்.

  • நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.

  • கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்காளதேச அணிக்கு எதிரான தொடரிலும் பும்ரா ஆட முடியாத சூழல் ஏற்பட்டது.

  • புத்தாண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பும்ரா, காயத்தில் இருந்து முழுமையாக திரும்பாத காரணத்தால் அவர் இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை.

  • இலங்கை தொடருக்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பும்ரா களமிறங்கவில்லை.

  • தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் பும்ரா இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

  • இன்னும் காயம் குணமடையாத காரணத்தால் ஐ.பி.எல். தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


தொடர்ந்து காயத்தால் இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்டான பும்ரா இல்லாததால் அவர் தவறவிட்ட போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தடுமாறியபோது அவரது வெற்றிடம் நன்றாகவே தெரிந்தது. தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை முகமது ஷமிதான் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இருப்பினும், விரைவில் பும்ரா அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


மேலும் படிக்க:Jasprit Bumrah Surgery: நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..!


மேலும் படிக்க: Most International Centuries: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியுள்ள ஆக்டிவ் ப்ளேயர்ஸ் லிஸ்ட் இதோ; முதலிடத்தில் யார் தெரியுமா?