இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காயம், அறுவை சிகிச்சை காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா இந்திய அணிக்காக களமிறங்காமல் உள்ளார்.


இந்த நிலையில், ஐ.பி.எல். தொடர் மார்ச் 31-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், பும்ராவிற்கு இன்னும் காயம் சரியாகாத காரணத்தாலும் அவர் முழங்காலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாலும் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிம்மசொப்பனம்:


இந்திய அணிக்கு பந்துவீச்சில் முதுகெலும்பாக விளங்குபவர் பும்ரா. எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காயத்தினால் அவதிப்படும் பும்ரா எந்த போட்டிகளிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.


பும்ராவிற்கு கடைசியாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார். அந்த போட்டிக்கு பிறகு இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணிக்காக பும்ரா களமிறங்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் பும்ரா, ஐ.பி.எல். மூலம் திரும்புவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்தனர்.


ரசிகர்கள் சோகம்:


ஆனால், தற்போது அவர் மீண்டும் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதால் அவர் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடற்தகுதி குறித்து பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான தகவலின்படி, அவரது நிலை தற்போது சீராகவும், முன்னேற்றமாகவும் இல்லை என்றும், அவருக்கு முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் மீண்டு வருவதற்கு 4 முதல் 5 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கருதப்படுவதாக கூறப்படுகிறது.


பும்ராவின் தற்போதைய உடல் தகுதியை வைத்து பார்க்கும்போது பும்ரா ஐ.பி.எல். தொடர் மட்டுமின்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.


டெஸ்ட் கேப்டன்:


பும்ரா தொடர்ந்து காயத்தாலும், அறுவை சிகிச்சையாலும் அணியில் இருந்து விலகியே இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 128 விக்கெட்டுகளையும், 72 ஒருநாள் போட்டிகளில் ஆடி 121 விக்கெட்டுகளையும், 60 டி20 போட்டிகளில் ஆடி 70 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலமான பும்ரா இதுவரை 120 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 145 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பும்ரா இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Lowest Margin Win: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. இதுதாங்க ரொம்ப கம்மியான ரன் வித்தியாச வெற்றி பட்டியல்..!


மேலும் படிக்க: Most International Centuries: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியுள்ள ஆக்டிவ் ப்ளேயர்ஸ் லிஸ்ட் இதோ; முதலிடத்தில் யார் தெரியுமா?