ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளும் விதிப்படியே நடந்தாலும், விதிகளை கடந்து அறத்தின்படி விளையாடும் வீரர்களையே ரசிகர்கள் நேசிப்பார்கள். அதன் காரணமாக, கிரிக்கெட் போட்டியில் மன்கட் முறையில் ஒரு வீரரை அவுட்டாக்குவதை ரசிகர்களில் பெரும்பாலோனார் ஏற்பதில்லை.
மன்கட் முறையில் அவுட்:
இந்த நிலையில், நியூசிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதி வரும் போட்டியில் மன்கட் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், அதன்பின்பு நடந்த சம்பவம்தான் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டாகா நகரில் இன்று நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் ஆடி வருகிறது.
இந்த போட்டியில், முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது 46வது ஓவரில் சோதி பந்துவீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்தார். அந்த ஓவரை இளம் வீரர் ஹாசன் முகமது வீசினார். அப்போது, பந்துவீச ஓடி வந்த ஹாசன் கிரீசை விட்டு ரன் எடுக்க ஓடத் தயாராக இருந்த சோதியை மன்கட் முறையில் அவுட்டாக்கினார். அவரது அப்பீலைத் தொடர்ந்து நடுவர்களும் அவுட் அளித்தனர். அப்போது, சோதி 17 ரன்கள் எடுத்திருந்தார்.
கட்டியணைத்த சோதி:
இதையடுத்து, களத்தை விட்டு வெளியேற சோதி தயாரானபோது வங்கதேச கேப்டன் லிட்டன்தாஸ், சவுமியா சர்காருடன் ஆலோசித்து விட்டு சோதியை மீண்டும் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து, மீண்டும் பேட் செய்ய சிரித்த முகத்துடன் ஓடி வந்த சோதிக்கு பந்துவீச்சாளர் ஹாசன் கைகொடுத்தார். ஆனால், அவர் ஹாசனுக்கு கை கொடுத்தது மட்டுமின்றி கட்டியணைத்து சென்றார். மன்கட் முறைக்கு பின்பு நடந்த இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கதேச கேப்டன் லிட்டன் தாசை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து, ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ரன்கள் எடுத்தனர். சோதி 39 பந்துகளில் 3 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் 66 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். நிகோல்ஸ் 49 ரன்கள் எடுத்தார். இலக்கை நோக்கி வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
ஒரு பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளாமல் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வதை பெரும்பாலும் ரசிகர்களும், சில அணியின் வீரர்களுமே விரும்புவதில்லை. இந்திய அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்வின் எதிரணி வீரர்களை மன்கட் முறையில் அவுட்டாக்கியதால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: SA vs AUS: சோதனை! ஆடும் முன்னே கொண்டாடலாமா..? கிப்சால் பரிதாபமாக வெளியேறிய தென்னாப்பிரிக்கா
மேலும் படிக்க: ODI World Cup Records: பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பந்துவீச்சாளர்கள்.. உலகக்கோப்பையில் இதுவரை தங்க பந்து வென்றது யார்?