சீனாவின் ஹாங்சோவ் மாநகரில் 19வது  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மிகவும் கோலாகளமாக தொடங்கியுள்ளது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 


19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:


ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, அக்டோபர் 8ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.


தொடக்க விழா:


போட்டியின் தொடக்க விழா ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் மைதானத்தில் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாலை மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதில், சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். பல நாட்டு தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். அதேநேரம், போட்டியில் பங்கேற்க அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த வீரர்களுக்கு சீனா விசா வழங்க மறுத்ததால், தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த இந்திய விளையாட்டு அமைச்சர் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. 


தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.



ஆசிய விளையாட்டு 2023: தொடக்க விழா




ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நடத்தப்பட்டது. 2018 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மைதானத்தில் சுமார் 80,000 பேர்வரை அமர்ந்து பார்க்க முடியும். பிரமாண்டமான தொடக்க விழாவைத் தவிர, இந்த மைதானத்தில் ஆசிய கோப்பைத் தொடரின் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது. 





ஆசிய போட்டிகள் வரலாறு:


ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.  இந்த நிலையில் தான் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 1990, 2010-ம் ஆண்டுகளில் அங்கு இந்த போட்டி நடைபெற்ற நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியை சீனா நடத்துவது இது 3-வது முறையாகும்.


அருணாசல பிரதேச வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு


இந்தியாவின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய – சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தம் என்று சொல்லி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் அவ்வப்போது உள்ளே நுழையவும் சீனா முயற்சித்து வருகிறது.


இதனால் இந்தியா – சீனா இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அண்மையில் சீனா ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அந்த பகுதியில் இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை இணைத்துள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை அக்‌ஷயா சின் என்று குறிப்பிட்டுள்ளதுடன், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று குறிப்பிட்டுள்ளது.


அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சில இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க  சீனா அனுமதிக்க மறுத்துள்ளது. இதனால், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சீன பயணத்தையும் ரத்து செய்து இந்திய அரசு முடிவு செய்ததால், இந்திய அணி வீரர்கள் மட்டும் போட்டிகளில் விளையாட அனுப்பிவைக்கப்பட்டனர்.