கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையே. 1975ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் மறக்க முடியாத பல சம்பவங்கள் உள்ளது. உலகக்கோப்பை தொடர் என்றாலே சோக்கர்ஸ் அணியாக கருதப்படுவது தென்னாப்பிரிக்க அணியே.
தென்னாப்பிரிக்க பரிதாபங்கள்:
அவர்கள் உலகக்கோப்பையை வெல்லாததற்காக அந்த வார்த்தையால் அவர்கள் விமர்சிக்கப்படவில்லை. உலகக்கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டிகளில் செல்வதற்கான முக்கியமான ஆட்டத்தை அலட்சியத்தின் காரணமாக கைவிட்டதாலே அவர்களை அவ்வாறு அழைக்கின்றனர்.
ஆலன் டொனால்ட் செய்த மோசமான சம்பவம் போலவே, கிப்ஸ் செய்த காரியத்தாலும் தோல்வி அவர்களை கவ்விக்கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. 1999ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் லீட்ஸ் நகரில் நடந்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
சதம் விளாசிய கிப்ஸ்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் கிறிஸ்டன் 21 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கல்லினனுடன் ஜோடி சேர்ந்த கிப்ஸ் சிறப்பாக ஆடினார். கல்லினன் 50 ரன்களில் அவுட்டாக, கிப்ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு 272 ரன்களை தென்னாப்பிரிக்க அணி இலக்காக நிர்ணயித்தது. கிப்ஸ் 134 பந்துகளில் 101 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 101 ரன்களை விளாசினார்.
இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை பொல்லாக் – எல்வொர்த்தி தங்கள் வேகத்தால் மிரட்டினர். மார்க் வாக் 5 ரன்களிலும். கில்கிறிஸ்ட் 5 ரன்களிலும் அவுட்டாக அடுத்து வந்த டேனியல் மார்டின் 11 ரன்களுக்கு அவுட்டானார். 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஆஸ்திரேலிய அணிக்காக கேப்டன் ஸ்டீவ் வாக் – ரிக்கி பாண்டிங் ஜோடி சேர்ந்தனர்.
கேட்ச் பிடிக்கும் முன் கொண்டாட்டம்:
12வது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் ஆஸ்திரேலிய அணியை இலக்கை நோக்கி கொண்டு செல்ல போராடினர். இந்த ஜோடியை பிரிக்க தென்னாப்பிரிக்காவின் பொல்லாக், எல்வொர்த்தி, டொனால்ட், குளுஸ்னர், குரோனியே, போஜோ போராடினர். பாண்டிங் – ஸ்டீவ் வாக் இருவரும் அரைசதம் கடந்து ஆடி வந்த நிலையில், ஆட்டத்தின் 31வது ஓவரை குளுஸ்னர் வீசினார். அந்த ஓவரில் மிட் விக்கெட் திசையில் கிப்ஸ் நின்றிருந்தார். அப்போது, ஸ்டீவ் வாக் அடித்த பந்து கிப்ஸின் கைக்கே வந்தது. ஆனால், கேட்ச்சை பிடிக்கும் முன்பே அவரை அவுட்டாக்கிய மகிழ்ச்சியை கிப்ஸ் கொண்டாடியதால் அவர் கையில் இருந்த பந்து நழுவி கீழே விழுந்தது. அப்போது, ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின்பு, பாண்டிங்கை அவர்கள் 69 ரன்களில் அவுட்டாக்கினாலும், ஸ்டீவ் வாக் ஆட்டமிழக்கால் தனி ஆளாக போராடி வந்தார். மைக்கேல் பெவன் 27 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து வந்த டாம் மூடியை மறுமுனையில் வைத்துக்கொண்டு ஸ்டீவ் வாக் போராடினார். கடைசியில் 2 பந்துகள் மீதம் இருக்கும்போது இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணியையும் வெற்றி பெற வைத்தார்.
கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா:
அந்த போட்டியில் தோற்றதால் தென்னாப்பிரிக்க அணி தொடரை விட்டும் வெளியேறிய வேண்டிய சூழலுக்கு ஆளானது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு சாதகமாக அமைந்தது. அதே உலகக்கோப்பையில் மீண்டும் இரு அணிகளும் மோதிய போட்டி டையில் முடிந்தது.
கிப்ஸ் மட்டும் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் நிச்சயமாக ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது கடினம் ஆகியிருக்கும். கடைசி வரை அவுட்டாகாத ஸ்டீவ் வாக் 110 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 120 ரன்கள் எடுத்தார். மேலும், அந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.